பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காணொலி மூலம் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 26 SEP 2023 12:34PM by PIB Chennai

வணக்கம்,

இன்றைய வேலைவாய்ப்பு மேளாவில் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் கடுமையான உழைப்புக்குப் பிறகு இந்த வெற்றியை அடைந்துள்ளீர்கள். லட்சக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்; எனவே, இந்த வெற்றி உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில், நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறீர்கள். விநாயகர் வெற்றியின் கடவுள். சேவை செய்வதற்கான உங்கள் உறுதி நாட்டின் இலக்குகளை அடைய வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இன்று நமது நாடு வரலாற்று சாதனைகளையும் முடிவுகளையும் கண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் நாரி சக்தி வந்தன் அதினியம் வடிவத்தில் வலுவான ஊக்கத்தைப் பெற்றனர். 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் தற்போது இரு அவைகளிலும் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கற்பனை செய்து பாருங்கள், இது எவ்வளவு பெரிய சாதனை! உங்களில் பெரும்பாலோர் பிறக்காத காலத்திலிருந்தே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நாட்டின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் நாட்டின் புதிய எதிர்காலம் புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

இன்று, இந்த வேலைவாய்ப்பு மேளாவில், நமது  மகள்கள் அதிக எண்ணிக்கையில் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இன்று, இந்தியாவின் மகள்கள் விண்வெளித் துறை முதல் விளையாட்டு வரை பல புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். பெண் சக்தியின் இந்த வெற்றியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான புதிய கதவுகள் திறக்கப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் கொள்கைகளாகும். நமது மகள்கள் இப்போது நாட்டின் ஆயுதப்படைகளில் பணியமர்த்தப்பட்டு நாட்டுக்கு சேவை செய்யும் பாதையில் முன்னேறி வருகின்றனர். பெண் சக்தி எப்போதுமே ஒவ்வொரு துறையிலும் புதிய ஆற்றலுடன் மாற்றங்களைக் கொண்டு வருவதை நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம் . இந்த 50% மக்களுக்கான நல்லாட்சிக்கான புதிய சிந்தனைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்.

நண்பர்களே,

இன்று, 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் நம்பிக்கைகள் மிக உயர்ந்தவை, நமது சமூகம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். இன்று இந்தப் புதிய இந்தியாவின் அற்புதமான சாதனைகளை நீங்களே பார்க்கலாம்! கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவில் மூவண்ணக் கொடியை ஏற்றிய இந்தியா இது. இந்த புதிய இந்தியாவின் கனவுகள் மிக அதிகம். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும்.

அடுத்த சில ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம். இன்று, நாட்டில் நிறைய விசயங்கள் நடந்து வருவதால், ஒவ்வொரு அரசு ஊழியரின் பங்கும் நிறைய அதிகரிக்கப் போகிறது. நீங்கள் எப்போதும் குடிமகன் முதலில் என்ற உணர்வில் செயல்பட வேண்டும். நீங்கள் தொழில்நுட்பத்துடன் வளர்ந்த தலைமுறையின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோரால் இயக்க முடியாத பொம்மைகள் போன்ற கேஜெட்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.

இப்போது நீங்கள் உங்கள் பணியிடத்தில் இந்த தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிர்வாகத்தில் புதிய மேம்பாடுகளை ஏற்படுத்துவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்?

நண்பர்களே,

கடந்த 9 ஆண்டுகளில் தொழில்நுட்ப மாற்றத்தால் ஆட்சி எவ்வாறு எளிதாகிவிட்டது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். முன்பெல்லாம் ரயில் டிக்கெட் பெற முன்பதிவு கவுன்டர்களில் நீண்ட வரிசைகள் இருந்தன. தொழில்நுட்பம் இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது. ஆதார் அட்டை, டிஜிட்டல் லாக்கர் மற்றும் இ-கே.ஒய்.சி ஆகியவை ஆவணங்களின் சிக்கலை நீக்கியுள்ளன. காஸ் சிலிண்டர் முன்பதிவு முதல் மின் கட்டணம் செலுத்துவது வரை அனைத்தும் இப்போது செயலிகள் மூலம் நடக்கிறது. டி.பி.டி., மூலம், அரசு திட்டங்களின் கீழ் உள்ள நிதி, மக்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றடைந்து வருகிறது. டிஜி யாத்திரை எங்கள் பயணத்தை எளிதாக்கியுள்ளது. அதாவது தொழில்நுட்பம் ஊழலைக் குறைத்துள்ளது, நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது, சிக்கலைக் குறைத்துள்ளது மற்றும் வசதியை அதிகரித்துள்ளது.

இந்த திசையில் நீங்கள் மேலும் மேலும் உழைக்க வேண்டும். ஏழைகளின் ஒவ்வொரு தேவையையும் எளிதாக பூர்த்தி செய்வதும், அரசின் ஒவ்வொரு பணியும் தொழில்நுட்பம் மூலம் எளிமையாக இருப்பதும் எப்படி? இந்த வேலைக்கு நீங்கள் புதிய வழிகளை, புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து, அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நண்பர்களே,

கடந்த 9 ஆண்டுகளில், நமது  கொள்கைகள் இன்னும் பெரிய இலக்குகளை அடைய வழிவகுத்துள்ளன. நமது கொள்கைகள் ஒரு புதிய மனநிலை, தொடர்ச்சியான கண்காணிப்பு, விரைவான முறையில் அமலாக்கம் மற்றும் வெகுஜன பங்கேற்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. 9 ஆண்டுகளில் மிஷன் முறையில் கொள்கைகளை அரசு செயல்படுத்தியுள்ளது. தூய்மை இந்தியாவாக இருந்தாலும் சரி, ஜல் ஜீவன் மிஷனாக இருந்தாலும் சரி, இந்த திட்டங்கள் அனைத்திலும் 100 சதவீதம் நிறைவு என்ற இலக்கில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் ஒவ்வொரு மட்டத்திலும் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பிரகதி பிளாட்பார்ம் மூலம் திட்டங்களின் முன்னேற்றத்தை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். இந்த முயற்சிகளுக்கு மத்தியில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு உங்களைப் போல புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் உள்ளது. உங்களைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போது, கொள்கைகளை செயல்படுத்தும் வேகமும், அளவும் அதிகரிக்கும். இது அரசாங்கத்திற்கு வெளியேயும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது தவிர, புதிய வேலை கலாச்சாரமும் உருவாக்கப்படுகிறது.

நண்பர்களே,

இன்று, உலகளாவிய பொருளாதாரங்களில் உள்ள சவால்களுக்கு மத்தியில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகமாக வளர்ந்து வருகிறது. நமது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இரண்டிலும் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு இன்று முதல் முறையாக அதன் நவீன உள்கட்டமைப்பில் சாதனை முதலீடு செய்கிறது. இன்று நாட்டில் புதிய துறைகள் விரிவடைந்து வருகின்றன. இன்று, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை விவசாயம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி காணப்படுகிறது.

மொபைல் போன்கள் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் வரை, கொரோனா தடுப்பூசி முதல் போர் விமானங்கள் வரை, இந்தியாவின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் சக்தி அனைவரின் முன்பும் உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் மட்டும் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் உயரும் என்று நம்பப்படுகிறது. அதாவது, இன்று நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

'விடுதலையின் அமிர்த காலம்’  என்னும்  அடுத்த 25 வருட வாழ்க்கையைப் போலவே உங்கள் அடுத்த 25 வருட வாழ்க்கையும் முக்கியமானது. குழுப்பணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜி 20 கூட்டங்கள் இந்த நாட்டில் இந்த மாதம் நிறைவடைந்ததை நீங்கள் பார்த்தீர்கள். தில்லி உள்பட நாட்டின் 60 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நேரத்தில் வெளிநாட்டு விருந்தினர்கள் நம் நாட்டின் பன்முகத்தன்மையின் வண்ணங்களைக் கண்டனர். நமது பாரம்பரியம், உறுதி மற்றும் விருந்தோம்பலை பிரதிபலிக்கும் நிகழ்வாக ஜி 20 மாறியது. ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றி பொது மற்றும் தனியார் துறைகளின் பல்வேறு துறைகளின் வெற்றியாகும். இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் ஒரு குழுவாக செயல்பட்டனர். இன்று நீங்களும் அரசு ஊழியர்களின் குழு. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறீர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உங்கள் கற்றல் பழக்கத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆன்லைன் கற்றல்  போர்ட்டல் மூலம் - 'ஐகோட் கர்மயோகி' மூலம் நீங்கள் விரும்பும் படிப்புகளில் சேரலாம்.

இந்த வசதியை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் உறுதியை நிறைவேற்றிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களே முன்னேற வேண்டும், இந்த 25 ஆண்டுகள் உங்களுக்கும் நாட்டிற்கும் சொந்தமானது. இதுபோன்ற அரிய கலவையை அரிதாகவே காணலாம், ஆனால் நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள்.

வாருங்கள் நண்பர்களே, சபதம் எடுத்து முன்னேறுவோம். நாட்டுக்காக வாழுங்கள்; நாட்டுக்கு ஏதாவது செய்யுங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி.

பொறுப்பு துரப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

***********

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1960789

AD/ANU/PKV/KRS


(Release ID: 1961103) Visitor Counter : 121