தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 53-வது தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது

Posted On: 26 SEP 2023 2:43PM by PIB Chennai

2021-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அறிவித்துள்ளார். இந்த முடிவைத் தெரிவித்த அமைச்சர், இந்திய சினிமாவுக்கு தனது மகத்தான பங்களிப்பிற்காக இந்த விருதை அறிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சியையும் கௌரவத்தையும் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

பியாசா, காகாஸ் கே பூல், சௌதாவி கா சந்த், சாகிப் பீவி அவுர் குலாம், கைடு, காமோஷி மற்றும் பல இந்தி திரைப்படங்களில் ஏற்ற பாத்திரங்களுக்காக அவர்  பாராட்டப்பட்டுள்ளார் என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். அவரது நடிப்புத் திறன் குறித்து அமைச்சர் கூறுகையில், "தனது 5 தசாப்தங்களுக்கும் மேலான திரைப்பட வாழ்க்கையில், அவர் தனது பாத்திரங்களில்  மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார், ரேஷ்மா மற்றும் ஷேரா திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய திரைப்பட விருது பெற்றார். பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது பெற்ற வஹீதா, தனது கடின உழைப்பால் மிக உயர்ந்த அளவிலான தொழில்முறை சிறப்பை அடையக்கூடிய ஒரு பாரதிய நாரியின்  அர்ப்பணிப்பு மற்றும் வலிமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்’’ என்று தெரிவித்தார்.

நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூத்த நடிகைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், "வரலாற்று சிறப்புமிக்க நாரி சக்தி வந்தன் அதினியம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த நேரத்தில், அவருக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவருக்கும், திரைப்படங்களுக்குப் பிறகு தனது வாழ்க்கையை தொண்டு மற்றும் சிறந்த நன்மைக்காக அர்ப்பணித்தவருக்கும் பொருத்தமான கவுரவமாகும்" என்று கூறினார்.

 

69-வதுதேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

பின்வரும் உறுப்பினர்கள் தாதா சாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்:

 

திருமதி ஆஷா பரேக்

திரு சிரஞ்சீவி

திரு பரேஷ் ராவல்

திரு புரோசென்ஜித் சாட்டர்ஜி

திரு சேகர் கபூர்

 

பல ஆண்டுகளாக தனது காலத்தின் மிகச் சில நடிகைகளால் சாதிக்க முடிந்ததை வஹீதா ரஹ்மான் தனது நடிப்புத் திறமையால் சாதித்துள்ளார். ஏராளமான விருதுகளை வென்றுள்ள அவர்,  கைடு (1965) மற்றும் நீல் கமல் (1968) ஆகிய படங்களில் நடித்ததற்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருதை வென்றார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் (1971) வென்ற இவர், 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார், பின்னர் 2011 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். வஹீதா ரஹ்மான் 90 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த திரையுலக வாழ்க்கையில், குறிப்பிடத்தக்கப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

***

AP/ANU/PKV/GK



(Release ID: 1961004) Visitor Counter : 266