பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் 'சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023'ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
"பல ஆண்டுகளாக, நீதித்துறையும் பார்களும் இந்தியாவின் நீதித்துறையின் பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றன"
"சட்டத் தொழிலின் அனுபவம் சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேலை செய்துள்ளது, மேலும் இன்றைய பாரபட்சமற்ற நீதி அமைப்பு இந்தியா மீதான உலகின் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவியது"
"நாரி சக்தி வந்தன் சட்டம் இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்குப் புதிய திசையையும் ஆற்றலையும் வழங்கும்"
"ஆபத்துகள் உலகளாவியதாக இருக்கும்போது, அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகளும் உலகளாவியதாக இருக்க வேண்டும்"
"சட்டம் தங்களுக்கே சொந்தம் என்பதை குடிமக்கள் உணர வேண்டும்"
"நாங்கள் இப்போது இந்தியாவில் புதிய சட்டங்களை எளிய மொழியில் வரைய முயற்சிக்கிறோம்"
"புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை சட்டத் தொழிலால் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"
Posted On:
23 SEP 2023 11:50AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 'சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023' ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்டத் தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக செயல்படுவதையும், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதையும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்த புரிதலை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உலகளாவிய சட்ட சகோதரத்துவத்தின் சிறந்தவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். இங்கிலாந்து சான்சலர் திரு அலெக்ஸ் சாக் மற்றும் இங்கிலாந்து பார் அசோசியேஷன் பிரதிநிதிகள், காமன்வெல்த் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 'வசுதைவ குடும்பகம்' உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது என்றார். இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் முன்னிலை வகித்த இந்திய வழக்குரைஞர் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் சட்டத்துறையின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். "பல ஆண்டுகளாக, நீதித்துறையும் வழக்கறிஞர்களும் இந்தியாவின் நீதித்துறையின் பாதுகாவலர்களாக உள்ளனர்", என்று அவர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் சட்ட வல்லுநர்களின் பங்கையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர், பாபு ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், லோக்மான்ய திலகர், வீர சாவர்க்கர் ஆகியோரை அவர் உதாரணமாகக் கூறினார். "சட்டத் தொழிலின் அனுபவம் சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேலை செய்துள்ளது, மேலும் இன்றைய பாரபட்சமற்ற நீதி அமைப்பு இந்தியா மீதான உலகின் நம்பிக்கையை அதிகரிக்க உதவியது" என்று அவர் மேலும் கூறினார்.
பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளுக்கு தேசம் சாட்சியாக இருக்கும் நேரத்தில், சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெறுவதை சுட்டிக் காட்டிய பிரதமர், மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூர்ந்தார். "நாரி சக்தி வந்தன் சட்டம் இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்குப் புதிய திசையையும் ஆற்றலையும் வழங்கும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். சமீபத்தில் புதுதில்லியில் நடந்து முடிந்த ஜி 20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றை உலகம் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு இதே நாளில், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் முதல் நாடு இந்தியா என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், தன்னம்பிக்கை நிறைந்த இன்றைய இந்தியா, 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடைய பாடுபட்டு வருவதாக வலியுறுத்தினார். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய இந்தியாவில் உள்ள சட்ட அமைப்புக்கு வலுவான, சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற அடித்தளங்களின் தேவையையும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 மிகவும் வெற்றிகரமாக மாறும் என்றும், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பைப் பெறும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்றைய உலகின் ஆழமான தொடர்பை பிரதமர் மோடி விரிவாக எடுத்துரைத்தார். எல்லைகள் மற்றும் அதிகார வரம்பைப் பற்றிக் கவலைப்படாத பல சக்திகள் இன்றும் உலகில் உள்ளன என்று அவர் கூறினார். "ஆபத்துகள் உலகளாவியதாக இருக்கும்போது, அவற்றைக் கையாள்வதற்கான வழிகளும் உலகளாவியதாக இருக்க வேண்டும்", என்று அவர் கூறினார். சைபர் பயங்கரவாதம், பணமோசடி மற்றும் செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் பேசினார், மேலும் இதுபோன்ற பிரச்சினைகளில் உலகளாவிய கட்டமைப்பைத் தயாரிப்பது அரசாங்க விவகாரங்களுக்கு அப்பாற்பட்டது, ஆனால் பல்வேறு நாடுகளின் சட்டக் கட்டமைப்பிற்கு இடையில் இணைப்பு தேவைப்படுகிறது என்று கூறினார்.
மாற்றுத் தீர்வு குறித்துப் பேசிய பிரதமர், வர்த்தகப் பரிவர்த்தனைகளின் சிக்கலான தன்மை அதிகரித்து வருவதால், ஏடிஆர் உலகெங்கிலும் நாணயத்தைப் பெற்றுள்ளது என்றார். இந்தியாவில் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான முறைசாரா பாரம்பரியத்தை முறைப்படுத்துவதற்காக, இந்திய அரசு மத்தியஸ்த சட்டத்தை இயற்றியுள்ளது என்றும் அவர் கூறினார். இதேபோல், லோக் அதாலத்களும் பெரும் பங்கு வகிக்கின்றன, கடந்த 6 ஆண்டுகளில் லோக் அதாலத்கள் சுமார் 7 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு கண்டுள்ளன.
பேசப்படாத நீதி வழங்கலின் ஒரு முக்கிய அம்சத்தை எடுத்துரைத்த பிரதமர், மொழி மற்றும் சட்டத்தின் எளிமையைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் அணுகுமுறைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கிய பிரதமர், எந்தவொரு சட்டத்தையும் இரண்டு மொழிகளில் முன்வைப்பது குறித்து நடந்து வரும் விவாதம் பற்றி தெரிவித்தார் - ஒன்று சட்ட அமைப்பு பழக்கப்பட்டுள்ளது, மற்றொன்று சாதாரண குடிமக்களுக்கு. "சட்டம் தங்களுக்கே சொந்தமானது என்பதை குடிமக்கள் உணர வேண்டும்" என்று வலியுறுத்திய திரு. மோடி, புதிய சட்டங்களை எளிய மொழியில் வரைவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் எடுத்துக்காட்டையும் வழங்கினார். இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒரியா ஆகிய 4 உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் பாராட்டுத் தெரிவித்ததோடு, இந்திய நீதித்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றத்தை பாராட்டினார்.
தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் புதிய நீதித்துறை செயல்முறைகள் மூலம் சட்ட செயல்முறைகளை நெறிப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். தொழில்நுட்ப முன்னேற்றம் நீதித்துறைக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது என்று கூறிய அவர், சட்டத் தொழிலால் தொழில்நுட்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, இந்திய பார் கவுன்சில் தலைவர் துஷார் மேத்தா, இங்கிலாந்து சான்சலர் அலெக்ஸ் சாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 இந்திய பார் கவுன்சிலால் 'நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்' என்ற தலைப்பில் 2023 செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்டத் தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கானத் தளமாக செயல்படுவதையும், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதையும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்த புரிதலை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் சட்டப் போக்குகள், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள், சட்ட தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய சட்டப் பிரதிதிகள் கலந்து கொண்டனர்.
***
ANU/AP/PKV/DL
(Release ID: 1959853)
Visitor Counter : 138
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam