பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாங்காக்கின் க்ளோங் டோய் துறைமுகத்தில்தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து மாசுக்  கட்டுப்பாட்டு பயிற்சியில்ஈடுபடும் இந்திய கடலோரக் காவல் படையின் மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்திர பிரஹாரி'

Posted On: 21 SEP 2023 10:13AM by PIB Chennai

பகிரப்பட்ட சவால்களை, குறிப்பாக கடல் மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் கடல்சார் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், இந்திய கடலோரக் காவல்படையின்  (ஐ.சி.ஜி) மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்திர பிரஹாரி', தனது நான்கு நாள் பயணத்தின் இறுதி நாளான செப்டம்பர் 20, 2023 அன்று தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள க்ளோங் டோய் துறைமுகத்தில் ஒரு விரிவான மாசுக் கட்டுப்பாட்டு பயிற்சி மற்றும் செயல்விளக்கத்தை மேற்கொண்டது. இந்தப் பயிற்சியில் தாய்லாந்தின் கடல்சார் அமலாக்க ஒருங்கிணைப்பு மையம் (எம்.இ.சி.சி), சுங்கத் துறை, கடல்சார் துறை, ராயல் கடற்படை, மீன்வளத் துறை மற்றும் பிற அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஐ.சி.ஜி.யுடன் இணைந்து தாய்லாந்தின் கடல் மாசுக் கட்டுப்பாட்டுத்  திட்டத்தை வடிவமைத்து சோதிக்கும் நிகழ்வை இந்தப் பயிற்சி உள்ளடக்கியது. எண்ணெய் மாசுபாடு  சூழல்களின் போது தடையற்ற ஒத்துழைப்பை உறுதி செய்து, சேவைகளிடையே அறிவு பகிர்வு மற்றும் கலந்துரையாடும் சூழலை இந்தப் பயிற்சி வளர்த்தது. சி.ஜி.யின் மாசு எதிர்வினை திறன்கள் மற்றும் பிராந்தியத்திற்கான இந்தியாவின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த பயிற்சி நிரூபித்தது.

பயிற்சிக்கு முன்னதாக, தூதரக அதிகாரிகள் மற்றும் தாய்லாந்து-எம்.இ.சி.சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டு யோகா அமர்வு கப்பலின் ஹெலோ டெக்கில் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள், யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையில் இணைப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அதன் ஒருங்கிணைக்கும் சக்தி மற்றும் பல நன்மைகளை வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டனர்.

இந்தப் பயணத்தின் போது, தேசிய மாணவர் படை (என்.சி.சி)  வீரர்கள் மற்றும் இந்திய தூதரகத்தின் பிரதிநிதிகளுடன் கப்பலின் ஊழியர்கள், பட்டாயா கடற்கரையில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த முன்முயற்சி, கரைகளில் நெகிழி மற்றும் பிற கழிவுப் பொருட்களை  சுத்தம் செய்வதற்கான என்.சி.சியின் நாடு தழுவிய முதன்மை பிரச்சாரமான புனித் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் இது  ஏற்படுத்தியது.

 தாய்-எம்.இ.சி.சி தலைமையகத்தில், கமாண்டிங் அதிகாரி டி.ஐ.ஜி ஜி.டி ரதுரி, கொள்கை மற்றும் திட்ட அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் விச்னு துபா-ஆங்-ஐ  சந்தித்துப் பேசினார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

இந்தியா - ஆசியான் முன்முயற்சியின் கீழ் 'சமுத்திர பிரஹாரி'யின் பாங்காக் பயணம், கடல்சார் துறையில் ஐ.சி.ஜி மற்றும் தாய் எம்.இ.சி.சி இடையேயான உறவுகளை மேலும் உயர்த்துவதிலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் இந்தியாவின்  ஜி20  தலைமைத்துவத்தின் 'வசுதைவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளுக்கு இணங்க, இந்தியாவை நம்பகமான கடல்சார் கூட்டாளியாக முன்னிலைப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க   சாதனையைக் குறிக்கிறது. 2022 நவம்பரில் கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்தியா-ஆசியான் வெளிநாட்டு பணியமர்த்தல் முன்முயற்சியை  அறிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

***

ANU/AD/BR/AG/GK


(Release ID: 1959345) Visitor Counter : 143