வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உலகப் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
15 SEP 2023 5:32PM by PIB Chennai
உலகளாவிய பொருளாதாரத்துடன் நாட்டை ஒருங்கிணைக்க இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் உறுதிபூண்டுள்ளது என்றும், இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று (15.09.2023) நடைபெற்ற தூய்மையான எரிசக்தி குறித்த 4 வது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர், ஜி 20 புது தில்லி பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தூய்மையான, நிலையான, மலிவான மற்றும் உள்ளடக்கிய எரிசக்தி மாற்ற நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியா -மத்திய கிழக்கு - ஐரோப்பிய பொருளாதார வழித்தடம், பசுமை ஹைட்ரஜன் போன்ற முன்முயற்சிகள் மூலம் உலகை ஒன்றிணைக்கும் என்று அவர் தெரிவித்தார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல், உலகை மிகவும் நிலையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், இணைக்கப்பட்டதாகவும் மாற்றுவதில் இந்தியா கணிசமாக பங்களிக்க விரும்புகிறது என்று அவர் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அதிக உலகளாவிய சந்தைகளைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்துமாறு தொழில் துறையினரை திரு பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் சிறந்த பொறியியல் நிபுணத்துவம் மற்றும் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் சிறப்பாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதற்கும், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் தூய்மை எரிசக்தியில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் முடிவு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க நாடுகளை ஜி 20 அமைப்புக்குள் பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டு வருவது பெருமைக்குரியது என்றும் அவர் கூறினார். ஜி 20 இப்போது இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் உள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மன்றமாக மாறியுள்ளது என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
***
(Release ID: 1957758)
SM/ANU/PLM/RS/KRS
(Release ID: 1957860)
Visitor Counter : 125