பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டத்தை செப்டம்பர் 17 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்


சுமார் ரூ.5400 கோடி செலவில் 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள 'யஷோபூமி' உலகின் மிகப்பெரிய மாநாட்டு மன்றங்களில் ஒன்றாகும்

'யஷோபூமி' அற்புதமான மாநாட்டு மையம் கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது

11000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அமரக்கூடிய மாநாட்டு மையம், 15 மாநாட்டு அறைகள், பெரிய அளவிலான அரங்குகள் மற்றும் 13 கூட்ட அறைகளைக் கொண்டுள்ளது

மாநாட்டு மையம் நாட்டின் மிகப்பெரிய எல்.ஈ.டி முகப்புடன் அமைக்கப்பட்டுள்ளது

அதிநவீன இருக்கை வசதிகளுடன் கூடிய மாநாட்டு மையத்தின் மண்டபம் பார்வையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்கும்

யஷோபூமி தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையுடன் இணைக்கப்படும்

தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை துவாரகா செக்டார் 21 முதல் புதிய மெட்ரோ நிலையம் 'யஷோபூமி துவாரகா செக்டார் 25' வரை நீட்டிக்கும் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 15 SEP 2023 4:37PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 17.09.2023  அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும்  இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை துவாரகா செக்டார் 21 முதல் புதிய மெட்ரோ நிலையம் 'யஷோபூமி துவாரகா செக்டார் 25' வரை நீட்டிப்பதற்கான பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

துவாரகாவில் 'யஷோபூமி' செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் நாட்டில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை வலுப்படுத்தப்படும்.

மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு மற்றும் 1.8 லட்சம் சதுர மீட்டருக்கும்  அதிகமான மொத்த கட்டுமான பரப்பளவு கொண்ட 'யஷோபூமிஉலகின் மிகப்பெரிய எம்.ஐ.சி.இ (கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) மையமாக அமையும்.

சுமார்  5400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 'யஷோபூமி'யில் அற்புதமான மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகள் உள்ளன.

73 ஆயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்ட மாநாட்டு மையம், பிரதான அரங்கம், பெரிய அளவிலான அரங்கு மற்றும் மொத்தம் 11,000 பேர் பங்கேற்கும் திறன் கொண்ட 13 கூட்ட அறைகள் உட்பட 15 மாநாட்டு அறைகளை இது கொண்டுள்ளது. இந்த மாநாட்டு மையம் நாட்டின் மிகப்பெரிய எல்இடி மீடியா ஃபேகேட் (LED media façade) எனப்படும் ஒளிரும் முகப்பை கொண்டுள்ளது. மாநாட்டு மையத்தில் உள்ள மண்டபத்தில் சுமார் 6,000 விருந்தினர்கள்  அமரும் வசதி ள்ளது. இந்த அரங்கம் மிகவும் புதுமையான தானியங்கி இருக்கை அமைப்புகளை கொண்டுள்ளது. அரங்கில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இங்கு வருபவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை உறுதி செய்யும். எட்டு தளங்களில் அமைந்துள்ள 13 கூட்ட அரங்குகளில் பல்வேறு அளவிலான கூட்டங்களை நடத்த முடியும்.  

'யஷோபூமி' உலகின் மிகப்பெரிய கண்காட்சி அரங்குகளில் ஒன்றாக விளங்கும்.  1.07 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கண்காட்சி அரங்கு, பொதுவான கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வணிக நிகழ்வுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்படும். ஊடக அறைகள், அதிமுக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வறைகள், பார்வையாளர் தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இதில் அடங்கும்.

'யஷோபூமி' 100 சதவீத கழிவு நீர் மறுபயன்பாடு, மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்,  அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளாகம் இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ-யின் இந்திய பசுமை கட்டட கவுன்சிலிடமிருந்து (ஐஜிபிசி) பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றுள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'யஷோபூமி'யில் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3,000 க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் வகையில், நிலத்தடி கார் பார்க்கிங் வசதியும் 100 க்கும் மேற்பட்ட மின்சார சார்ஜிங் வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

புதிய மெட்ரோ நிலையமான 'யஷோபூமி துவாரகா செக்டார் 25' திறப்பு விழாவுடன் 'யஷோபூமி' தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையுடன் இணைக்கப்படும்.

விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனில் மெட்ரோ ரயில்களின் செயல்பாட்டு வேகத்தை மணிக்கு 90 முதல் 120 கிலோ மீட்டர் வரை தில்லி மெட்ரோ அதிகரிக்கும். இதன் மூலம் பயண நேரம் குறையும்.

***

 

SM/ANU/PLM/RS/GK


(Release ID: 1957806) Visitor Counter : 197