தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான பதிவு தொடங்கியதால் இது சினிமா ரசிகர்களுக்கான கொண்டாட்ட நேரம்

Posted On: 13 SEP 2023 4:18PM by PIB Chennai

54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான பிரதிநிதி பதிவுகள் தொடங்கியதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு கொண்டாட்டத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை இந்த விழா நடைபெற உள்ளது. இந்த வருடாந்திர திரைப்பட விழா இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதாகும். அதே நேரத்தில் இளம் திறமையாளர்கள் தங்களின் திறமையை சர்வதேசப்  பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்த ஒரு தளத்தையும் வழங்குகிறது.

மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (என்.எஃப்.டி.சி), கோவா மாநில அரசுடன் இணைந்து, கோவா பொழுதுபோக்கு சங்கம் (ஈ.எஸ்.ஜி) மற்றும் இந்திய திரைப்படத் துறை ஆகியவை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில், இந்திய மற்றும் உலக சினிமாவில் சிறந்தவை திரையிடப்படும்.

இந்த விழா பல்வேறு பிரிவுகளில் இந்திய மற்றும் உலக சினிமாவின் மாறுபட்ட தேர்வைக் கொண்டுள்ளது. சர்வதேச போட்டி (பாராட்டப்பட்ட 15 திரைப்படங்களின் தேர்வு), ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கம் விருதுக்கான போட்டி, ஒரு இயக்குநரின் சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான போட்டி, உலகின் சினிமா (உலகெங்கிலும் உள்ள சர்வதேச திரைப்படங்களின் ஐ.எஃப்.எஃப்.ஐயின் அதிகாரப்பூர்வ தேர்வு), இந்திய அரங்கு, ஃபெஸ்டிவல் கேலிடோஸ்கோப் (மூத்தவர்களின் விதிவிலக்கான திரைப்படங்களின் தொகுப்பு, வளர்ந்து வரும் திறமையாளர்களின் படைப்புகள், பிற விழாக்களிலிருந்து விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள்) ஆகியவை இந்திய மற்றும் உலக திரைப்பட விழாவை சிறப்பிக்கும் சில பிரிவுகளாகும்.

திரையிடல்களுக்கு அப்பால், தேசிய மற்றும் சர்வதேச திரைப்படத்துறையைச் சேர்ந்த 200 க்கும் அதிகமான  புகழ்பெற்ற ஆளுமைகளால் நடத்தப்படும் பயிலரங்குகள், மாஸ்டர் வகுப்புகள், கலந்துரையாடும்  அமர்வுகள் மற்றும் குழு விவாதங்கள் இடம்பெறும்.

54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான பிரதிநிதி பதிவு பின்வரும் பிரிவுகளுக்கு iffigoa.org மூலம் செய்யப்படலாம்:

பிரதிநிதி சினிமா ஆர்வலர்: ரூ.1000/- + ஜி.எஸ்.டி.

பிரதிநிதி தொழில்முறை: ரூ.1000/- + ஜி.எஸ்.டி.

பிரதிநிதி மாணவர்: பதிவு கட்டணம் இல்லை

54 வது ஐ.எஃப்.எஃப்.ஐ உடன் இயங்கும், என்.எஃப்.டி.சி ஏற்பாடு செய்த பிலிம் பஜாரின் 17 வது பதிப்பும் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.இதற்கான  பிரதிநிதி பதிவு filmbazaarindia.com என்ற இணையத்தை அணுகலாம்.

54 வது ஐ.எஃப்.எஃப்.ஐ க்கான ஊடகப் பதிவு விரைவில் தொடங்கும்.

***

AP/SMB/KRS



(Release ID: 1957142) Visitor Counter : 103