பாதுகாப்பு அமைச்சகம்
துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஆசிய நாடுகளின் கடலோர காவல்படைகளின் 19-வது தலைவர்கள் கூட்டத்தில் இந்திய கடலோர காவல்படையின் குழு பங்கேற்றது
Posted On:
10 SEP 2023 6:54PM by PIB Chennai
துருக்கியின் இஸ்தான்புல்லில் 2023 செப்டம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய கடலோர காவல்படை முகமைகளின் 19-வது தலைவர்கள் கூட்டத்தில் (எச்.ஏ.சி.ஜி.ஏ.எம்) இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு ராகேஷ் பால் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு பங்கேற்றது. இந்த ஆசிய கடலோர காவல்படை கூட்டத்தில் 23 ஆசிய நாடுகளின் கடலோர காவல்படை முகமைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த மூன்று நாள் உயர்மட்டக் கூட்டத்தில், கடல்சார் சட்ட அமலாக்கம், கடல் உயிர்களின் பாதுகாப்பு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பொருட்கள் தடுப்பு, ஆயுதங்கள் கடத்தல் தடுப்பு, கடல் வழியாக மனிதர்களை சட்டவிரோதமாக கடத்துவதைத் தடுப்பது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. ஆசிய கடலோர காவல்படையினரிடையே கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நவம்பர் 1999-ல் இந்திய கடலோரக் காவல்படையால் திருட்டுக் கப்பலான எம்.வி அலோண்ட்ரா ரெயின்போ கைப்பற்றப்பட்ட பின்னர், பிராந்திய கடலோரக் காவல்படைகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜப்பானிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பலதரப்பு மன்றம் உருவாக்கப்பட்டது. இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பான, மற்றும் தூய்மையான கடல்களை உறுதி செய்வதிலும், கடல் பகுதிகளை மேம்படுத்துவதிலும், உறுப்பு நாடுகளின் கடலோரக் காவல்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. பொதுவான கடல்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், இலக்கு சார்ந்த அணுகுமுறையை செயல்படுத்த இந்த மன்றம் நான்கு பணிக்குழுக்களைக் கொண்டுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை, தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) பணிக்குழுவின் தலைமைப் பொறுப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலில் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தகவல் பகிர்வு உள்ளிட்ட பிற பணிக் குழுக்களின் உறுப்பினராகவும் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு புதுதில்லியில் இந்த கூட்டம் நடைபெற்றது.
***
ANU/SM/PLM/DL
(Release ID: 1956108)
Visitor Counter : 175