பாதுகாப்பு அமைச்சகம்

இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையில் இருந்து புறப்பட்டது ஐஎன்எஸ் தில்லி கப்பல்

Posted On: 03 SEP 2023 6:29PM by PIB Chennai

ஐஎன்எஸ் தில்லி கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டது. அது நிறைவடைந்த நிலையில் 03-09-2023 அன்று கொழும்பிலிருந்து புறப்பட்டது.

 

கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பல் இருந்தபோது, கப்பலின் ஊழியர்களும் இலங்கை கடற்படையின் (எஸ்.எல்.என்) பணியாளர்களும் பங்கேற்ற  பயிற்சி மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. க்ரோ தீவு கடற்கரைப் பகுதியில் கப்பலின் ஊழியர்கள் மற்றும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த பணியாளர்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

 

ஐஎன்எஸ் தில்லியின் கடற்படை அதிகாரி இலங்கையின் மேற்கு கடற்படை பகுதி (காம்வெஸ்ட்) கமாண்டருடன் உரையாடினார். அத்துடன் அவர் 1987-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை இலங்கையில் இந்திய அமைதிப் படையில் (ஐ.பி.கே.எஃப்) பணிபுரிந்து, பணியின்போது அங்கு உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

நட்பு நாடுகளுக்கு அத்தியாவசிய மருத்துவ பொருட்களை வழங்குவதற்கான இந்தியாவின் 'ஆரோக்ய மைத்ரி' தோழமை முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான இந்திய தூதர் திரு கோபால் பாக்லே, ஐஎன்எஸ் தில்லிக்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது இலங்கை நாடாளுமன்றத் தலைவருக்கு  ஆரோக்கிய மைத்ரி அதிநவீன மருந்துப் பெட்டகத்தை வழங்கினார். இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகள் உட்பட பல மூத்த அரசு அதிகாரிகள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

ஐஎன்எஸ் தில்லி மற்றும் இலங்கை கப்பலான எஸ்எல்என் விஜயபாகு இணைந்து கொழும்பு நகருக்கு அருகிலுள்ள கடல்பகுதியில் நடத்திய கூட்டுப் பயிற்சியுடன் இந்தப் பயணம் நிறைவடைந்தது.

***

SM/ANU/PLM/DL



(Release ID: 1954509) Visitor Counter : 121