விண்வெளித்துறை

பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் மூலம் இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்ட விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட தருணம் இந்தியா பிரகாசிக்கும் தருணமாக அமைந்துள்ளது: மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்


நட்சத்திரங்களை ஆராயவும் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டறியவும் ஊக்கம் அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி: திரு ஜிதேந்திர சிங்

சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது- இது முழு அறிவியல் மற்றும் முழு தேசம் என்ற அணுகுமுறைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது

140 கோடி மக்களின் கூட்டு மன உறுதியுடனும் கூட்டு முயற்சியுடனும், உலக அரங்கில் பெருமைக்குரிய இடத்தை அடைவதை நோக்கி பாரத அன்னை முன்னேறும் அடுத்த 25 ஆண்டுகளில் இது ஒரு முக்கியமான நாள்: திரு ஜிதேந்திர சிங்

Posted On: 02 SEP 2023 3:04PM by PIB Chennai

இஸ்ரோவின் நம்பகமான, துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமான பிஎஸ்எல்வி-எக்ஸ்எல்) மூலம் இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்ட விண்கலமான ஆதித்யா எல் 1, ஸ்ரீஹரிகோட்டா-வில் இருந்து இன்று செலுத்தப்பட்டது இந்தியா "பிரகாசிக்கும் தருணம்" என்று மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் பிஎஸ்எல்வி-சி 57 செலுத்து வாகனம், ஆதித்யா எல் 1-ஐ வெளியேற்றிய உடன் கட்டுப்பாட்டு அறையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடையே உரையாற்றிய அமைச்சர், முழு உலகமும் இதை ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையில், இது உண்மையில் இந்தியா பிரகாசிக்கும் சூரிய ஒளி தருணம் என்று கூறினார்.

இந்திய விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் பல ஆண்டுகளாக உழைத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் விண்வெளித் துறைக்கு புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்ததன் மூலமும், வானம் எல்லை அல்ல என்பதைக் கூறி ஊக்கமளித்து இதைச் சாத்தியமாக்கியதற்காகவும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

நட்சத்திரங்களை ஆராய்வதற்கும் அதற்கு அப்பால் உள்ள பிரபஞ்சத்தின் மர்மங்களைக் கண்டுபிடிப்பதற்கும் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியை வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். நமது விண்வெளி விஞ்ஞானிகள் மகத்தான திறனை உணர்த்தி இருப்பதற்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது, நமது கலாச்சாரத்தில் நாம் பின்பற்ற விரும்பும் 'முழு அறிவியல் மற்றும் முழு தேசம்' என்ற அணுகுமுறைக்கு ஒரு சான்றாகும் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

 

இந்த தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றிய பெருமை இஸ்ரோவுக்கு இருந்தாலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் நிறுவனங்களும் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ ஏதாவது ஒரு வகையில் பங்களித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம், தேசிய விண்வெளி ஆய்வகங்கள், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், நாக்பூர் என்.ஜி.ஆர்.ஐ, கரக்பூர் ஐ.ஐ.டி, சென்னை ஐ.ஐ.டி, தில்லி ஐ.ஐ.டிமும்பை ஐ.ஐ.டி என இந்தப் பட்டியல் மிக நீளமானது என அவர் கூறினார்.

இது ஒரு குழு முயற்சி என்று கூறிய திரு ஜிதேந்திர சிங், ஆதித்யா எல் 1 செலுத்தப்பட்ட இந்த நாள் ஒரு முக்கியமான நாள் என்று கூறினார். 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி, நமது 140 கோடி மக்ககளின் கூட்டு விருப்பத்துடனும் கூட்டு முயற்சியுடனும், உலக அரங்கில் பெருமைக்குரிய இடத்தை பாரத அன்னை அடையவும், அமிர்த காலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான முன்னேற்றத்துக்கு இது ஒரு முக்கியமான கணக்கீட்டு நாளாகும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிஎஸ்எல்வி-சி 57 மூலம் ஆதித்யா-எல் 1 விண்ணில் செலுத்தப்பட்டதை இஸ்ரோ உறுதிப்படுத்தியது. இதன் மூலம், இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலம் சூரியன்-பூமி எல் 1 புள்ளியை நோக்கி தமது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டதால், ஆதித்யா-எல் 1 மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 என்பது சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய சூரிய ஆய்வுத் திட்ட இயக்கம் ஆகும். அடுத்த நான்கு மாதங்களில் பல்வேறு நிலைகளில் சுற்றுப்பாதை உயர்த்தும் பணிகள் நடைபெறும். அத்துடன் பயண கட்டங்களின் மூலம், இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியன்-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)- ஐச் சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்படும்.

எல் 1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ள ஒரு செயற்கைக்கோள் சூரியனை எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து பார்க்கும் வகையிலான முக்கிய நன்மையைக் கொண்டுள்ளது. இது சூரிய செயல்பாடுகளையும் விண்வெளியில் அதன் தாக்கத்தையும் கண்காணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

இந்த விண்கலம் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை (கொரோனா) மின்காந்த மற்றும் துகள் மற்றும் காந்த புல கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி கண்காணிக்க ஏழு பேலோட்-களை சுமந்து செல்கிறது.

சிறப்பு வான்டேஜ் புள்ளி எல் 1 ஐப் பயன்படுத்தி, நான்கு பேலோட்கள் சூரியனை நேரடியாகக் காணும். மீதமுள்ள மூன்று பேலோட்-கள் லாக்ரேஞ்ச் புள்ளி எல் 1-ல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களின் உள் ஆய்வுகளை மேற்கொள்ளும். இதனால் கோள்களுக்கு இடையிலான சூரிய இயக்கவியலின் பரவல் விளைவு குறித்த முக்கியமான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 

ஆதித்யா எல் 1 திட்டம், கொரோனல் வெப்பம், கொரோனல் பெரு வெளியேற்றம், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள்கள் மற்றும் புலங்களின் பரவல் போன்றவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் மிக முக்கியமான தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

SM/ANU/PLM/DL



(Release ID: 1954367) Visitor Counter : 105