ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திருமதி ஜெயா வர்மா சின்ஹா பொறுப்பேற்பு

Posted On: 01 SEP 2023 11:06AM by PIB Chennai

ரயில்வே வாரியத்தின் (ரயில்வே அமைச்சகம்) புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) திருமதி ஜெயா வர்மா சின்ஹா இன்று ரயில்பவனில் பொறுப்பேற்றார். ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திருமதி ஜெயா வர்மா சின்ஹாவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. இந்திய ரயில்வேயின் இந்த தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, திருமதி ஜெயா வர்மா சின்ஹா, ரயில்வே வாரியத்தின் உறுப்பினராக (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு) பணியாற்றியுள்ளார். இந்திய ரயில்வேயில் சரக்கு மற்றும் பயணிகள் சேவைகளின் ஒட்டுமொத்த போக்குவரத்திற்கு திருமதி சின்ஹா பொறுப்பாக இருந்தார்.

திருமதி ஜெயா வர்மா சின்ஹா, 1988-ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் (ஐ.ஆர்.டி.எஸ்) சேர்ந்தார். இந்திய ரயில்வேயில் 35 ஆண்டுகளுக்கும் மேலான பணிக்காலத்தில், ரயில்வே வாரியத்தின் உறுப்பினர் (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு), போக்குவரத்து பிரிவு  கூடுதல் உறுப்பினர் போன்ற பல்வேறு முக்கிய பதவிகள்  வகித்துள்ளார்.  தென்கிழக்கு ரயில்வேயின் முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவராவார். வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக இவர் பணியாற்றியபோது, கொல்கத்தாவில் இருந்து டாக்கா செல்லும் புகழ்பெற்ற மைத்ரி விரைவு ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள்  மாணவியான திருமதி சின்ஹா, புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

***

ANU/SM/BR/KPG

 


(Release ID: 1953995) Visitor Counter : 399