பிரதமர் அலுவலகம்

இந்தியா-கிரீஸ் கூட்டறிக்கை

Posted On: 25 AUG 2023 11:39PM by PIB Chennai

கீரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, 25.08.2023 அன்று ஹெலனிக் (கிரீஸ்) குடியரசிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவும் கிரேக்கமும் வரலாற்று ரீதியான தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதை கிரீஸ் பிரதமர் திரு மிட்சோடாக்கிஸ் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் நினைவு கூர்ந்தனர், மேலும் உலகளாவிய நடைமுறைகள் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் இந்த நேரத்தில், நமது இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

 

இரு தலைவர்களும் இயல்பான மற்றும் நட்பு சூழலில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பைக் குறிப்பிட்ட அவர்கள், பரஸ்பர ஆர்வமுள்ள இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

நீண்டகால கடல்சார் கண்ணோட்டத்தைக் கொண்ட இரண்டு பண்டைய கடல் சார் நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில், அவர்கள் கடல் சட்டத்திற்கு இணங்க, குறிப்பாக ஐநா கடல் சட்ட (யு.என்.சி.எல்.ஓ.எஸ்) விதிகளுக்கு இணங்க, சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட மத்திய தரைக்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பற்றிய தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு மற்றும் சர்வதேச அமைதிக்கான கப்பல் போக்குவரத்து நடைமுறைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

 

ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக மற்றும் சுதந்திரமான சந்தைகளைக் கொண்டுள்ளன என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர், மேலும் ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது பரஸ்பர நன்மை பயக்கும் என்பதுடன் நேர்மறையான பிராந்திய மற்றும் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். கிரீஸ் மற்றும் இந்தியா இரு நாடுகளும் தங்கள் பிராந்தியங்களில் சவால்கள் இருந்தபோதிலும், அசாதாரணமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளன என்றும், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்துள்ளன என்றும் இருநாட்டுப்  பிரதமர்களும் குறிப்பிட்டனர். தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக மற்றும் முதலீட்டு பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்தியா-ஐரோப்பிய யூனியன் கூட்டுச் செயல்பாட்டு நடைமுறைகளை விரைவாகச் செயல்படுத்துவதற்கு இரு பிரதமர்களும் தங்கள் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர்.

 

தங்கள் நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நீண்டகால நெருக்கமான உறவின் அடித்தளத்தில், இரு தலைவர்களும் கிரேக்க-இந்திய இருதரப்பு உறவுகளை அடுத்த கட்ட உத்தி ரீதியான நிலைக்கு மேம்படுத்த முடிவு செய்தனர். அத்துடன் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் பணியாற்றுவதற்கும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் இரு பிரதமர்களும் முடிவு செய்தனர். சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்திருப்பதைப் பாராட்டி, மகிழ்ச்சி தெரிவித்த தலைவர்கள், 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இரு தரப்பும் பணியாற்றுவது என ஒப்புக் கொண்டனர்.

 

பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி, கல்வி, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். பரஸ்பர நலனுக்காக துறை ரீதியான ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக வேளாண்மைக்கான ஹெலனிக் (கிரீஸ்) -இந்திய கூட்டு துணைக் குழுவை நிறுவுவது உட்பட விவசாயத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மற்றும் தூதரக உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக வழக்கமான பேச்சுவார்த்தைகளை உறுதி செய்யுமாறு இரு தலைவர்களும் தங்கள் நாடுகளின் மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். கிரீஸ் மற்றும் இந்தியா இடையே நேரடி விமான சேவையை ஏற்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையிலான நீண்டகால கலாச்சார பரிமாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகையான கலைகளிலும் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை இரு தலைவர்களும் வரவேற்றனர். புராதன இடங்களைப் பாதுகாப்பதில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கவும், யுனெஸ்கோவில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

போக்குவரத்து மற்றும் இடம்பெயர்வு கூட்டுச் செயல்பாட்டு ஒப்பந்தத்தை (எம்.எம்.பி.ஏ) விரைவாக இறுதி செய்வது பரஸ்பர நன்மை பயக்கும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர். குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையில் தொழிலாளர்களின் சுதந்திரமான போக்குவரத்தை இது எளிதாக்கும் என அவர்கள் கூறினர்.

 

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளை அவர்கள் கண்டித்தனர். எப்போது, எங்கு, யாரால், எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்கள் நடத்தப்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் கூறினர்.  பயங்கரவாதத்துக்கு  பினாமிகளைப் பயன்படுத்தி அதை மறைமுகமாக ஊக்குவிப்பதை இரு தலைவர்களும் வன்மையாகக் கண்டித்தனர்.

 

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் (ஐ.எஸ்.ஏ) இணைய கிரீஸ் நாட்டை வரவேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, பேரீடர் மீட்சி உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பில் (சி.டி.ஆர்.ஐ) கிரீஸ் உறுப்பினராக இணையும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஜி 20 அமைப்பில் இந்தியாவின் தலைமைக்கு மகிழ்ச்சி தெரிவித்த கிரஸ் பிரதமர் திரு மிட்சோடாக்கிஸ், இந்தியாவின் தலைமையின் கீழ், ஜி 20 அதன் இலக்குகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் போது கிரீஸ் அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருமாறு கிரீஸ் பிரதமருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

******

ANU/AP/PLM/DL



(Release ID: 1952415) Visitor Counter : 141