குடியரசுத் தலைவர் செயலகம்

பிரம்மகுமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணி நினைவாக குடியரசுத் தலைவர் தபால்தலையை வெளியிட்டார்

Posted On: 25 AUG 2023 12:56PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (25.08.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணியின் நினைவாக தபால் தலையை வெளியிட்டார். தாதி பிரகாஷ்மணியின் 16-வது நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறையின் 'மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ் இந்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தாதி பிரகாஷ்மணி ஆன்மீகத்தின் மூலம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்திய கலாச்சாரத்தை பரப்பியதாகக் கூறினார்.  அவரது தலைமையின் கீழ், பிரம்ம குமாரிகள் அமைப்பு, உலகின் மிகப்பெரிய பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக மாறியது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். சவாலான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் பிரம்ம குமாரிகள் அமைப்பை அவர் வழிநடத்தினார்  என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

வாழ்க்கை தற்காலிகமானது என்பது உலகின் மிகப்பெரிய உண்மை என்றும், ஒரு நபர் அவரது செயல்களால் மட்டுமே நினைவுகூரப்படுகிறார் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். தாதி பிரகாஷ்மணி இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் மற்றும் மனிதகுலத்தின் நலன் குறித்த அவரது செயல்பாடுகள் எப்போதும் நம்மிடையே உயிர்ப்புடன் இருக்கும் என குடியரசுத் தலைவர் கூறினார். தாதி பிரகாஷ்மணியின் செயல்பாடுகள் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சந்திரயான் -3 திட்டத்தின் சமீபத்திய வெற்றி குறித்து பேசிய குடியரசுத் தலைவர், முன்னெப்போதும் இல்லாத வெற்றியை இந்தியா விஞ்ஞானிகள் பெற்றுள்ளதாகவும் இதை நாம் அனைவரும் காண்பதாகவும் தெரிவித்தார். நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். சந்திரயான் -3 திட்டத்தின் மூலம் நிலவு தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்கும் என்றும், இது முழு உலகிற்கும் பயனளிக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

***

SM/PLM/KPG

 

 

 



(Release ID: 1952167) Visitor Counter : 143