கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியில் 4-வது ஜி-20 கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம் நாளை தொடங்குகிறது

Posted On: 22 AUG 2023 5:30PM by PIB Chennai

ஜி20  நான்காவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம் வாரணாசியில் நாளை (23.08.2023) தொடங்குகிறது. கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் 26.08.2023 அன்று நடைபெறுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்  நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கஜுராஹோ, புவனேஸ்வர் மற்றும் ஹம்பியில் முந்தைய மூன்று கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன.

"ஜி 20 கலாச்சாரம்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உலகளாவிய செயல்பாட்டை வடிவமைத்தல்" என்ற தலைப்பில் ஒரு விரிவான அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் இந்த அறிக்கை, வாரணாசியில் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியிடப்படும்.

வாரணாசியில் நடைபெறும் கலாச்சார அமைச்சர்களின் கூட்டம், கலாச்சார சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல், நிலையான எதிர்காலத்திற்காக பாரம்பரியத்தைப் பயன்படுத்துதல், படைப்பாற்றல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், கலாச்சாரப் பாதுகாப்புக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகிய நான்கு முன்னுரிமை துறைகளில் கவனம் செலுத்தும்.  ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்த கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தில் ஒரு சிறப்பு தபால்தலை வெளியிடப்படுகிறது.

இந்தப் பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கலாச்சார, இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஜி20 பிரதிநிதிகள் இந்தக் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கவுள்ளனர்.

2020 ஆம் ஆண்டில், சவூதி அரேபிய தலைமைத்துவத்தின் கீழ், கலாச்சார அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். 2021 ஆம் ஆண்டில், இத்தாலிய தலைமைத்துவத்தின் போது கலாச்சாரம் ஒரு பணிக்குழுவாக முறைப்படுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்தோனேசிய தலைமைத்துவத்தின் நிலையான வளர்ச்சியில் கலாச்சாரத்தின் பங்கு மேலும் வலியுறுத்தப்பட்டது. வாரணாசியில், ஜி 20 உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவது  நான்காவது முறையாகும்.

***

AP/ANU/PLM/RS/KPG
 


(Release ID: 1951175)