சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஜி 20 இந்திய தலைமைத்துவம்


குஜராத்தின் காந்திநகரில் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் முதல் உலகளாவிய உச்சி மாநாடு தொடங்கியது

Posted On: 17 AUG 2023 12:06PM by PIB Chennai

"பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய உச்சிமாநாடு நம்பிக்கையின் அம்சமாக செயல்படுகிறது  என்றும்  ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான அணுகுமுறையை ஊக்குவிப்பதாகவும், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான முதல் உலகளாவிய உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தபோது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

பண்டைய ஞானம் மற்றும் நவீன அறிவியலைத் தழுவுவதன் மூலம், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற நெறிமுறைகளை வளர்க்கும் அதே நேரத்தில் சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய நாம் கூட்டாக பணியாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார். "இந்த உலகளாவிய உச்சிமாநாடு பாரம்பரிய மருத்துவ துறையில் உரையாடல், கருத்து பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார். பல நூற்றாண்டுகளாக, பாரம்பரிய மற்றும் தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், நவீன காலங்களில் கூட, இயற்கை மற்றும் மூலிகை அடிப்படையிலான மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் தேவை பாரம்பரிய குணப்படுத்தும் நடைமுறைகளின் நீடித்த முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்காக குஜராத்திற்கு வருகை தந்துள்ள  பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களை வரவேற்ற டாக்டர் மாண்டவியா, "மரியாதைக்குரிய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரைக் கொண்ட நகரமான காந்திநகர் இந்த மதிப்புமிக்க உச்சிமாநாட்டிற்கு பொருத்தமான பின்னணியாக செயல்படுகிறது என்று கூறினார். வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த குஜராத், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் போன்ற ஜாம்பவான்களின் பிறப்பிடமாகும் என்று அவர் குறிப்பிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தேசிய ஒருமைப்பாட்டுக்கான அவரது அசைக்க முடியாத உணர்வும், அர்ப்பணிப்பும் நம் நாட்டில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளதாக அவர் கூறினார்.

குஜராத்தின் ஜாம்நகரை தலைமையிடமாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் குறித்து டாக்டர் மாண்டவியா கூறுகையில், "இந்த மையம் ஒரு அறிவு மையமாக செயல்படுகிறது என்றும், பண்டைய அறிவை நவீன அறிவியலுடன் ஒருங்கிணைத்து மக்கள் மற்றும் பூமியின் முன்னேற்றத்திற்காக செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் முக்கிய செயல்பாடுகளை இணைப்பதன் மூலம், இந்த மையம் உலகளவில் பாரம்பரிய மருத்துவத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது அவர் கூறினார்.

பின்னர் பேசிய திரு சர்பானந்த சோனோவால், "பாரம்பரிய மருத்துவத்திற்கான முதல் உலகளாவிய உச்சிமாநாடு எல்லைகளைத் தாண்டி, சுகாதாரத்தின் எதிர்காலத்திற்காக மனதை ஒன்றிணைப்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது என்று தெரிவித்தார். மேலும் உலகளவில் சுகாதாரத்தில் ஒரு புதிய சகாப்தத்தின் விடியலைக் குறிப்பதாகவும் அவர் கூறினார். பாரம்பரிய மருந்துகளில் ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கான சாத்தியமான பகுதிகளை அடையாளம் காணவும், உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இலக்குகளை அடைவதில் பாரம்பரிய மருத்துவத்தைப் பயன்படுத்தவும் இந்த உச்சிமாநாடு உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் பேசிய போது, ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் கீழ் உலகளாவிய சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை அங்கீகரிப்பதாக கூறினார். நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னதாக அவர் ஒரு சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை பார்வையிட்டதன் மூலம், நாட்டில் ஆரம்ப சுகாதார சேவைகள் விரிவுபடுத்தப்படுவதைக் காண அவருக்கு உதவியது. தொலை மருத்துவ முறையை இந்தியா ஏற்றுக்கொள்வதையும் அவர் எடுத்துரைத்தார். இது சுகாதார சேவை விநியோகத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த உதவுவதாக அவர் கூறினார்.

ஆயுஷ் அமைச்சகம் இணைந்து நடத்தும் இந்த உச்சிமாநாடு ஆகஸ்ட் 17 முதல் 19 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வரும் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு இணை நிகழ்வாகும். "அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கி" என்ற கருப்பொருளுடன் ஆகஸ்ட் 17 முதல் 18 வரை இரண்டு நாட்கள் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

தொடக்க விழாவில் ஆயுஷ் துறை இணை அமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் கலுபாய், குஜராத் சுகாதார அமைச்சர் திரு ருஷிகேஷ் படேல், பூட்டான் சுகாதார அமைச்சர் திருமதி லோன்போ தாசோ டெச்சென் வாங்மோ மற்றும் பொலிவியாவின் மூதாதையர் பாரம்பரிய மருத்துவத்தின் தேசிய இயக்குநர் திருமதி விவியன் டி கமாச்சோ ஹினோஜோசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் அடுத்த இரண்டு நாட்களில் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், பாரம்பரிய மருத்துவ பயிற்சியாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

***

SM/ANU/IR/RS/KPG



(Release ID: 1949833) Visitor Counter : 154