சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான செவிலியர், மருத்துவர்கள் மற்றும் பிறரின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்


செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின விழாவைக் காண நாடு முழுவதும் இருந்து 50 செவிலியர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்

"மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறை இல்லாமல் உலகின் வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது"

ரூ.20,000 கோடி சேமிப்பின் மூலம் மக்கள் மருந்தக மையங்கள், நாட்டின் நடுத்தர வர்க்கத்திற்கு புதிய பலத்தை அளித்துள்ளன

மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 25,000ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Posted On: 15 AUG 2023 11:05AM by PIB Chennai

தில்லியில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து கொண்டாட்டங்களைக் காணவும், பங்கேற்கவும் நாடு முழுவதிலுமிருந்து 50 செவிலியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.  கிராமத் தலைவர்கள் , ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1800 சிறப்பு விருந்தினர்களில், இந்த சிறப்பு விருந்தினர்கள் ஒரு பகுதியாக இருந்தனர்.

நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான செவிலியர், மருத்துவர்கள் மற்றும் பிறரின் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார். மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறை இல்லாமல் உலகின் வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

நாட்டின் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலியுறுத்திய பிரதமர், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதார உத்தரவாதத்தை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அரசாங்கம் ரூ.70,000 கோடி முதலீடு செய்துள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 200 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் என்ற சாதனையை அடைவதில் சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக அவர்களின் முன்மாதிரியான பங்களிப்பை பாராட்டினார். "கொரோனா காலத்திலும் அதற்குப் பின்னரும் உலகிற்கு உதவுவது, இந்தியாவை உலகின் நண்பராக்கியுள்ளது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரே பூமி, ஒரே சுகாதாரம் மற்றும் ஒரே எதிர்காலம் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த பிரதமர், "ரூ.20,000 கோடி சேமிப்பின் மூலம் மக்கள் மருந்தக மையங்கள்நாட்டின் நடுத்தர வர்க்கத்திற்கு புதிய பலத்தை அளித்துள்ளன. மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 10,000 மையங்களிலிருந்து, 25,000ஆக உயர்த்தும் இலக்குடன் வரும் நாட்களில் நாடு செயல்படப் போகிறது”, என்று அவர்  உறுதியளித்தார்.

---

ANU/AP/BR/DL



(Release ID: 1949133) Visitor Counter : 78