வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், விமானம் மூலம் அமெரிக்காவுக்கு மாதுளை ஏற்றுமதிக்கு வசதி செய்து தருகிறது

Posted On: 08 AUG 2023 1:33PM by PIB Chennai

பழங்கள் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) மாதுளம் பழத்தை முதல் முறையாக சோதனை அடிப்படையில் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்து கொடுத்துள்ளது. இந்தியாவின் தேசிய தாவர பாதுகாப்பு அமைப்பு (என்.பி.பி.ஓ), அமெரிக்காவின் விலங்கு மற்றும் தாவர சுகாதார ஆய்வு சேவை அமைப்பு (யு.எஸ்-ஏ.பி.ஐ.எஸ்), மகாராஷ்டிரா மாநிலம் வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் (எம்.எஸ்.ஏ.எம்.பி), சோலாப்பூரில் உள்ள மாதுளை குறித்த தேசிய ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மாதுளை ஏற்றுமதியை முதல் முறையாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) தொடங்கியுள்ளது.

அமெரிக்காவுக்கான மாதுளை ஏற்றுமதி அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதன் மூலம், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று அபெடா தலைவர் திரு அபிஷேக் தேவ் கூறினார். மாதுளை ஏற்றுமதிக்கு அமெரிக்க இறக்குமதியாளர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ள அபெடா பதிவு செய்யப்பட்ட 'ஐ.என்.ஐ ஃபார்ம்ஸ்' மாதுளையை சோதனை அடிப்படையில் ஏற்றுமதி செய்தது. அமெரிக்க சந்தைகளில் ஏற்கெனவே இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், மாதுளையும் அமெரிக்காவில் வெற்றிகரமான வரவேற்பைப் பெறும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

2022-23 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு 58.36 மில்லியன் டாலர் மதிப்புள்ள 62,280 மெட்ரிக் டன் மாதுளை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மாதுளை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. சாகுபடி பரப்பு சுமார் 2,75,500 ஹெக்டேர் ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மாதுளையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். மாதுளை ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கவும், விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளை நீக்கவும் மாதுளைக்கான ஏற்றுமதி மேம்பாட்டு மன்றங்களை (ஈபிஎஃப்) அபெடா அமைத்துள்ளது.

****



(Release ID: 1946763) Visitor Counter : 131