பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற செமிகான் இந்தியா மாநாடு 2023இல், பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 28 JUL 2023 2:30PM by PIB Chennai

குஜராத்தின் பிரபல முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ராஜீவ் சந்திரசேகர் அவர்களே, தொழில்துறை நண்பர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

 

செமிகான் இந்தியாவிற்கு உங்கள் அனைவரையும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து வரவேற்கிறேன். இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் கண்காட்சியை நான் இப்போது பார்வையிட்டேன். இன்னும் சில நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை அனைவரும், குறிப்பாக குஜராத்தின் இளம் தலைமுறையினர் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

21-ஆம் நூற்றாண்டில் நிறுவனங்களான உங்களுக்கு இந்தியாவில் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் ஜனநாயகம்மக்கள்தொகை மற்றும் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட ஈவுத்தொகை ஆகியவை உங்கள் வணிகத்தை இரண்டு, மூன்று மடங்குகளாக்கும். இன்று இந்தியாவின் டிஜிட்டல் துறையான மின்னணு உற்பத்தித் துறையிலும் அதிவேக வளர்ச்சியை நாம் காண்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இத்துறையில் இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தது. இன்று உலகளாவிய மின்னணு உற்பத்தியில் நமது பங்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்னணு உற்பத்தி 30 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது. இன்று அது 100 பில்லியன் டாலரையும் தாண்டியுள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியும் இரண்டே ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்பேசிகளின் ஏற்றுமதியும் தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது.

 

நண்பர்களே,

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் 2 செல்பேசி உற்பத்தி ஆலைகள் மட்டுமே இருந்தன. இன்று இந்த எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிராட்பேண்ட் இணைப்பைப் பொறுத்தவரை 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் 6 கோடி பயனர்கள் இருந்தனர். இன்று அவர்களின் எண்ணிக்கை  80 கோடியாக அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டில், இந்தியாவில் 25 கோடி இணைய இணைப்புகள் இருந்தன, இன்று 85 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

நண்பர்களே,

இன்று உலகம் நான்காவது தொழிற்புரட்சியைக் காண்கிறது - 'தொழில்துறை 4.0'. இத்தகைய தொழிற்புரட்சியை உலகம் கடந்து செல்லும் போதெல்லாம், அதன் அடித்தளம் ஏதோ ஒரு பிராந்திய மக்களின் விருப்பங்களாகவே இருந்து வருகிறது. இந்திய மக்கள் தொழில்நுட்பத்திற்கு உகந்தவர்கள் மட்டுமல்ல, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதிலும் வேகமானவர்கள். இன்று, இந்தியாவில் மலிவான தரவு, ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் தரமான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரம் ஆகியவை டிஜிட்டல் பொருட்களின் நுகர்வை பன்மடங்கு அதிகரிக்கின்றன. சுகாதாரம் முதல் விவசாயம் மற்றும் தளவாடங்கள் வரை, திறன்மிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு பெரிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கங்களிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வருகிறீர்கள். குறைக்கடத்தி நமது தேவை மட்டுமல்ல என்பதையும் இந்தியா உணர்ந்துள்ளது. இன்று உலகிற்கு ஒரு நம்பிக்கையான, நம்பகமான சிப் விநியோக சங்கிலி தேவைப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை விட சிறந்த நம்பகமான கூட்டாளி யார் இருக்க முடியும்? இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நிலையான, பொறுப்பான மற்றும் சீர்திருத்தம் சார்ந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளதால் இன்று முதலீட்டாளர்கள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இன்று ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வருவதால் தொழில்துறை இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இங்கு தொழில்நுட்பம் வேகமாக விரிவடைந்து வருவதால் தொழில்நுட்பத் துறை இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது.

 

நண்பர்களே,

 

இந்தியா தனது உலகளாவிய பொறுப்பை நன்கு புரிந்து கொண்டுள்ளது. எனவே, கூட்டாளி நாடுகளுடன் இணைந்து, ஒரு விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி வருகிறோம். அதனால்தான் இந்தியாவில் ஒரு துடிப்பான குறைக்கடத்தி சூழலியலை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். சமீபத்தில், தேசிய குவாண்டம் மிஷனுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதே ஜி-20 மாநாட்டின் மையக்கருத்து. இந்தியாவை குறைக்கடத்தி உற்பத்தி மையமாக மாற்றியதன் பின்னணியில் உள்ள எங்கள் உத்வேகமும் இதுதான். உலகளாவிய நன்மை மற்றும் சிறந்த உலகத்திற்கான இந்தியாவின் திறனை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் பங்கேற்பு, உங்கள் ஆலோசனைகள் மற்றும் உங்கள் எண்ணங்கள் மிகவும் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அரசு உங்களுடன் துணை நிற்கும்.  உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! நன்றி.

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர்  உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.    

***

AP/RB/DL



(Release ID: 1944116) Visitor Counter : 121