பிரதமர் அலுவலகம்

தில்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 30 JUN 2023 3:13PM by PIB Chennai

கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு யோகேஷ் சிங் அவர்களே, அனைத்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நண்பர்களும் தில்லி பல்கலைக்கழகத்தின் இந்த பொன்னான விழாவில் கலந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் எனக்கு இந்த அழைப்பை விடுத்தபோது, நான் இங்கே வர வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். இங்கு வருவது மிகுந்த அன்புக்குரியவர்கள் மத்தியில் வருவது போன்ற உணர்வை அளிக்கிறது.

தில்லி பல்கலைக்கழகத்தைப் பற்றிய அனைத்தையும் புரிந்து கொள்ள நூறு ஆண்டு வரலாறு தொடர்பான ஆவணப்படத்தைப் பார்த்தோம். இதன் மூலம், தில்லி பல்கலைக்கழகத்தின் பங்களிப்புகளைப் புரிந்து கொள்ள முடியும். என் மாணவப் பருவத்திலிருந்தே எனக்குத் தெரிந்த சிலர் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் மிக முக்கியமான ஆளுமைகளாக மாறிவிட்டனர். இன்று இங்கு வந்தால், பழைய நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும், அவர்களை சந்திக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

நண்பர்களே,

எனக்கு இது ஒரு மிக நல்ல வாய்ப்புதான். தில்லி பல்கலைக்கழகம் இன்று தனது 100 ஆண்டுகளை கொண்டாடும் இந்த சூழலில் உங்கள் அனைவருடனும் இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இரண்டு நண்பர்கள் ஒன்று சேரும்போது, உலகெங்கிலும் உள்ள விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், உங்களைப் போலவே நானும் தில்லி மெட்ரோவில் என் இளம் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இங்கு வந்தேன். அந்த உரையாடல்களில், நான் சில விஷயங்களைக் கண்டுபிடித்தேன். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் கண்டேன்.

நண்பர்களே

இன்றைய சந்தர்ப்பம் இன்னொரு காரணத்திற்காகவும் சிறப்பு வாய்ந்தது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நாடு அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நேரத்தில் தில்லி பல்கலைக்கழகம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எந்த நாடாக இருந்தாலும், அதன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதன் சாதனைகளின் உண்மையான பிரதிபலிப்பாகும். இந்த 100 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் பயணத்தில் பல வரலாற்று மைல்கற்கள் உள்ளன. இதில் பல பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு வகையில் தில்லி பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல, ஒரு இயக்கமாகவும் இருந்து வருகிறது. இப்பல்கலைக்கழகம் ஒவ்வொரு கணமும் வாழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகம் ஒவ்வொரு கணத்திற்கும் உயிர் கொடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், அனைத்து மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே

இன்று, புதிய மற்றும் பழைய மாணவர்கள் இந்த நிகழ்வின் மூலம் ஒன்றிணைகின்றனர். இயல்பாகவே, சில பசுமையான விவாதங்களும் இருக்கும். இந்த 100 ஆண்டுகளில் பல்கலைக்கழகம் அதன் உணர்ச்சிகளை உயிர்ப்புடன் வைத்திருந்தது என்றால், அது அதன் மதிப்புகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே

அறிவைப் பெற்றவன் மகிழ்ச்சியானவன், வல்லவன் என்பது பொதுவான கருத்து. உண்மையில் அறிவுடையவனே வெற்றி பெறுகிறான். எனவே, இந்தியாவில் நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்கள் இருந்தபோது, இந்தியா மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் உச்சத்தில் இருந்தது. தட்சசீலம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தபோது, அறிவியல் துறையில் இந்தியா உலகை வழிநடத்தியது. இந்தியாவின் வளமான கல்வி முறை இந்தியாவின் செழிப்பின் அடையாளமாக இருந்தது.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு கணிசமாக இருந்த காலம் அது. ஆனால், பல நூறு ஆண்டுகால அடிமை முறை, கல்விக் கோயில்களாக இருந்த நமது கல்வி மையங்களை அழித்துவிட்டது. இந்தியாவின் அறிவு ஓட்டம் ஸ்தம்பித்தபோது, இந்தியாவின் வளர்ச்சியும் தேக்கமடைந்தது.

நீண்ட கால அடிமைத்தனத்திற்குப் பிறகு நாடு சுதந்திரம் பெற்றது. இந்த நேரத்தில், சுதந்திரத்தின் உணர்ச்சி அலைக்கு ஒரு உறுதியான வடிவத்தைக் கொடுப்பதில் இந்திய பல்கலைக்கழகங்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. இதன் விளைவாக, அக்காலத்திய சமகால உலகிற்கு சவால் விடக்கூடிய ஒரு இளம் தலைமுறை உருவானது. தில்லி பல்கலைக்கழகமும் இந்த இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்தது. இதன் அனைத்து மாணவர்களும், தங்கள் நிறுவனத்தின் வேர்களை அறிந்திருப்பார்கள். கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது நமது இருப்பை வடிவமைக்கிறது மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பார்வைகளை விரிவுபடுத்துகிறது.

நண்பர்களே,

ஒரு தனிநபராக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி, அவற்றின் எதிர்பார்ப்புகள் தேசத்தின் தீர்மானங்களுடன் இணைந்திருக்கும்போது, அதன் வெற்றி தேசத்தின் சாதனைகளுடன் இணையும். ஒரு காலத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் மூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தன, இன்று 90 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில், இன்று உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இன்று, தில்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண் மாணவிகளின் எண்ணிக்கை ஆண் மாணவர்களை விட அதிகமாக உள்ளது. நாட்டில் பாலின சமத்துவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு கல்வி நிறுவனத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது நாட்டைச் சென்றடைகிறது. எனவே, பல்கலைக்கழகத்திற்கும் எதிர்காலத்திற்கான தேசத்தின் தேவைகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, தில்லி பல்கலைக்கழகம் அதன் 125 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. கடந்த நூற்றாண்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், முந்தைய நூற்றாண்டின் மூன்றாவது பத்தாம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. இந்த நூற்றாண்டின் இந்த மூன்றாவது பத்தாம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஒரு புதிய வேகத்தைக் கொடுக்கும். இன்று, நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி மற்றும் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே

கல்வி என்பது கற்பித்தல் செயல்முறை மட்டுமல்ல. அது ஒரு கற்றல் செயல்முறையும் கூட. நீண்ட காலமாக, மாணவர்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும் என்பதில் கல்வியின் கவனம் இருந்தது. இருப்பினும், மாணவர்கள் எதைக் கற்க விரும்புகிறார்கள் என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தியுள்ளது. உங்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது, மாணவர்கள் தங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தேர்ந்தெடுக்கப் பெரிய வசதி உள்ளது.

கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்நிறுவனங்களை போட்டித்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை கல்வியின் தரத்துடன் இணைத்துள்ளோம். நிறுவனங்களின் செயல்திறன் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவற்றுக்கு அதிக தன்னாட்சி வழங்கப்படுகிறது.

நண்பர்களே,

கல்வியில் எதிர்கால கொள்கைகள் மற்றும் முடிவுகளின் விளைவாக இன்று இந்திய பல்கலைக்கழகங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுகின்றன. 2014 ஆம் ஆண்டில், 12 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே கியூஎஸ் உலக தரவரிசையில் பட்டியலிடப்பட்டன, ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

நமது கல்வி நிறுவனங்கள் உலகில் தனி முத்திரை பதித்து வருகின்றன. தரமான கல்வி, மாணவர்-ஆசிரியர் விகிதம் மற்றும் நற்பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் நமது கல்வி நிறுவனங்கள் விரைவாக முன்னேறி வருகின்றன.

நண்பர்களே,

இதற்கெல்லாம் பின்னால் இருக்கும் மிகப்பெரிய வழிகாட்டி சக்தி எது தெரியுமா? வழிகாட்டும் சக்தியாக இருப்பது இந்தியாவின் இளைஞர் சக்தி, இந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கும் எனது இளைஞர்களின் ஆற்றல்.

நண்பர்களே

ஒரு காலத்தில் மாணவர்கள் எந்தவொரு நிறுவனத்திலும் சேருவதற்கு முன்பு வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்து வந்தனர். கல்வி இந்த அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. ஆனால், இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தக் கருத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் சொந்த பாதையை செதுக்க விரும்புகிறார்கள்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் சில நூறு புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இன்று இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2014-15-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 40 சதவீதத்திற்கும் அதிகமான காப்புரிமை கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. வழங்கப்படும் காப்புரிமைகளின் எண்ணிக்கையும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், இந்தியா முன்பு 81 வது இடத்தில் இருந்தது. இப்போது நாம் 46 வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று திரும்பியுள்ளேன். இந்தியாவின் மதிப்பும் பெருமையும் இன்று எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்தியாவின் இன்றைய பெருமை அதிகரிக்க என்ன காரணம்? பதில் ஒன்றுதான். ஏனெனில், இந்தியாவின் திறன்கள் வளர்ந்துள்ளன, மேலும் இந்தியாவின் இளைஞர்கள் மீது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான முன்முயற்சி (ஐ.சி.இ.டி) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆழ்கடல் முதல் விண்வெளி வரை, செமிகண்டக்டர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை பல்வேறு துறைகளில் நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்

ஒரு காலத்தில் இந்தியாவுக்கு எட்டாத தொழில்நுட்பங்கள் இப்போது நம் இளைஞர்களுக்கு கிடைக்கின்றன. அவர்களின் திறன் மேம்பாடு அடைகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான், கூகுள், அப்ளைடு மெட்டீரியல்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்ய முடிவு செய்துள்ளன.

நண்பர்களே,

எதிர்காலம் உங்களுக்கு சிறந்த வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது மற்றும் அது உங்கள் கதவை  தட்டுகிறது என்பது தெளிவாகிறது.

நண்பர்களே

நான்காவது தொழில்துறைப் புரட்சியும் நம் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏஆர் - விஆர் பற்றிய அறிவியல் புனைகதைகளைத் திரைப்படங்களில் நாம் பார்த்தது இப்போது நிஜ வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. வாகனம் ஓட்டுவது முதல் அறுவை சிகிச்சை வரை, ரோபோடிக்ஸ் புதிய துறையாக மாறி வருகிறது. இந்த துறைகள் அனைத்தும் இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு, நமது மாணவர்களுக்கு புதிய வழிகளை உருவாக்கி வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா அதன் விண்வெளித் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. ட்ரோன் தொடர்பான கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்தியா கொண்டு வந்துள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு முன்னேறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மற்றொரு அம்சம், ஆயிரக்கணக்கான இளைஞர்களும் நமது மாணவர்களும் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதுதான். இன்று, உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றியும், அதன் அடையாளத்தைப் பற்றியும், அதன் கலாச்சாரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில், உலகின் ஒவ்வொரு நாடும் அதன் சொந்த தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தன. ஆனால், இந்தியா தமது சொந்த தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், பிற நாடுகளுக்கும் உதவிகளை வழங்கியது.

எனவே, நெருக்கடியான நேரத்திலும் சேவையை ஊக்குவிக்கும் இந்தியாவின் மதிப்புகள் தொடர்பான ஆர்வம் உலகில் எழுந்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்கள், அதன் ஜி -20 தலைமைப் பதவி அனைத்தும் இந்தியாவைப் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்க பங்களிக்கின்றன. இது நமது மாணவர்களுக்கு மானுடவியல் துறையில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. யோகா, கலாச்சாரம், திருவிழாக்கள், இலக்கியம், வரலாறு, பாரம்பரியம், உணவு போன்றவை இப்போது அனைவராலும் விவாதிக்கப்படுகிறது. அவை அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கும் விஷயங்களாக மாறி வருகின்றன. இந்திய இளைஞர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இன்று, ஜனநாயகம், சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற இந்திய மதிப்புகள் உலக அளவில் பொருத்தமானவையாக மாறி வருகின்றன. அரசாங்க மன்றங்கள் முதல் ராஜதந்திரம் வரை, பல துறைகளில் இந்திய இளைஞர்களுக்கு தொடர்ந்து புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைத் திறந்துள்ளன.

இன்று, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பழங்குடி அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய பாரம்பரிய அருங்காட்சியகம் தில்லியில் அமையப்போகிறது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். கலை, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றில் ஈடுபாடுள்ள இளைஞர்களுக்கு, தங்கள் ஆர்வத்தை தொழிலாக மாற்ற இப்போது பல வாய்ப்புகள் உள்ளன. அதுபோலவே, இந்திய ஆசிரியர்களும் இன்று உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். உலகத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்களில் பலர் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்திய ஆசிரியருடனான தங்கள் தொடர்பைப் பற்றி மிகவும் பெருமையுடன் பேசுகிறார்கள்.

இந்தியாவின் மென்மையான சக்தியால் இந்திய இளைஞர்களுக்கு வெற்றிகளை உருவாக்க முடியும். இவை அனைத்திற்கும், நமது பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும், மேலும் நமது மனநிலையை நாம் தயார்படுத்த வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனக்கென ஒரு செயல்த் திட்டத்தை உருவாக்கி, அதன் இலக்குகளை தீர்மானிக்க வேண்டும்.

இந்த நிறுவனத்தின் 125 ஆண்டுகளை நீங்கள் கொண்டாடும் போது, உங்கள் தரவரிசை, உலகின் சிறந்த தரவரிசைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். எனவே, இதை அடைவதற்கான உங்கள் முயற்சிகளை முடுக்கிவிடுங்கள். எதிர்காலத்தை உருவாக்கும் கண்டுபிடிப்புகள் இங்கு நடைபெறவும், உலகின் சிறந்த யோசனைகள் மற்றும் தலைவர்கள் இங்கிருந்து உருவாகவும் நீங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். இந்த மாற்றங்களுக்கு மத்தியில், சில விஷயங்களில் மாறாதீர்கள் நண்பர்களே. சில விஷயங்களை அப்படியே விட்டு விடுங்கள்.

நண்பர்களே

நம் வாழ்க்கையில் நாம் ஒரு இலக்கை நிர்ணயிக்கும்போது, அதற்கு முதலில் நம் மனதையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். ஒரு தேசத்தின் மனதையும் இதயத்தையும் தயார் செய்யும் பொறுப்பு அதன் கல்வி நிறுவனங்களிடம் உள்ளது. கல்வி நிறுவனங்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் குறிக்கோள் மூலம் மட்டுமே நமது புதிய தலைமுறையினர், சவால்களை ஏற்று எதிர்கொள்ளும் மனப்பான்மையுடன் எதிர்காலத்திற்கு தயாராக முடியும்.

தில்லி பல்கலைக்கழகம் தமது பயணத்தில் முன்னேறும்போது இந்த தீர்மானங்களை நிச்சயமாக நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நூற்றாண்டுப் பயணத்தை நீங்கள் முன்னெடுத்துச் சென்ற விதம், இன்னும் அதிக திறன்களுடன், இன்னும் அற்புதமான முறையில், அதிக கனவுகளையும் தீர்மானங்களையும் சுமந்து, வெற்றியை அடைவதை நோக்கித் தொடரட்டும். சாதனைகள் உங்கள் அடிச்சுவடுகளைத் தொடட்டும், உங்கள் திறமைகளால் தேசம் முன்னேறட்டும். இந்த மகிழ்ச்சியுடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

******

 

ANU/PLM/KPG  



(Release ID: 1943229) Visitor Counter : 130