சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
'நிறுவனங்களுக்கு அப்பால் மனநலத்தைக் கொண்டுசெல்லுதல்' என்ற தேசிய மாநாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தொடங்கிவைத்தார்
Posted On:
26 JUL 2023 12:12PM by PIB Chennai
"நிறுவனங்களுக்கு அப்பால் மனநலத்தைக் கொண்டுசெல்லுதல்" என்ற தேசிய மாநாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இன்று தொடங்கிவைத்தார்.தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ராவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மனநல சுகாதாரச் சட்டம், 2017-ஐ செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதும், மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து விவாதிப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
"மனநலம் என்பது நம் ஆரோக்கியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், ஏனெனில் இது நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கிறது" என்று டாக்டர் பவார் கூறினார். மனநலத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், "தனிநபர்கள் தங்களுக்குத் தேவையான உதவியை நாடுவதைத் தடுக்கும் மனத்தடையை அகற்றுவது மிகவும் முக்கியம்" என்றார். பிரதமர் மோடி தலைமையின் கீழ், மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, இது வரலாற்று சிறப்புமிக்க மனநல சுகாதாரச் சட்டம் 2017 நிறைவேற்றப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
"பொதுவான மனநல கோளாறுகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைப்பதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது" என்று டாக்டர் பவார் கூறினார். மத்திய அரசின் முதன்மையான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மனநலம் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். "தேசிய டெலி-மனநல சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, 42 டெலி-மனஸ் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன, அவை ஏற்கனவே 2 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகளைப் பதிவு செய்துள்ளன" என்றும் அவர் கூறினார்.
நிறுவனங்களின் வரம்புகளைக் கடந்து, சமூக அடிப்படையில் கவனம் செலுத்தும் ஒரு புதிய மனநல சுகாதார முன்னுதாரணத்தின் அவசியத்தை மத்திய அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியாவில் மனநல சவால்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், மனநல சுகாதாரம் எளிதில் அணுகக்கூடிய, மலிவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நேயமுள்ள எதிர்காலத்தை நோக்கிப் பணியாற்றவும் அவர் பிரமுகர்களை வலியுறுத்தினார்.
நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், "பத்தில் ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகையான மனநல கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார். மனநலத்தை சரிசெய்ய சுகாதாரம், கல்வி, பொதுக் கொள்கை மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது" என்றார். மனநோயின் மீது அனுதாபம் என்றில்லாமல் நற்கருணையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், உடல் ஆரோக்கியத்திற்கு இணையான முக்கியத்துவத்தை மன ஆரோக்கியத்திற்கும் அளிக்க வேண்டும் என்ற வலுவான வாதத்தை முன்வைத்தார். "மனநலம், போதைப்பொருள் பயன்படுத்துதல், பொது மருத்துவ பராமரிப்பு, மருத்துவமனை மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவற்றின் முறையான ஒருங்கிணைப்பு நமக்குத் தேவை என்று அவர் கூறினார். "மனநலக் கல்வியை நமது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் ஒருங்கிணைக்க வேண்டும். சமூக ஊடகங்களுடன் ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தியாவில் மனநலப் பிரச்சினைகளை சரிசெய்வதில் உள்ள சவால்களை எடுத்துரைத்த நீதிபதி மிஸ்ரா, மனநல சேவைகள் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த அதிக நிதி மற்றும் வளங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மனநல நிறுவனங்களில் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற சரியான உள்கட்டமைப்பின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் தொழில்முறை மனநலப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், "மனநல சுகாதாரச் சட்டம், 2017 பின்னணியில் மனநலம் அனைவருக்கும் அக்கறை ' என்ற நூலும், "மனநல சுகாதாரச் சட்டம், 2017 அமலாக்கத்தின் நிலை" என்ற அறிக்கையும் முக்கியப் பிரமுகர்களால் வெளியிடப்பட்டன.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் பொதுச் செயலாளர் பாரத் லால்; தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் ராஜீவ் ஜெயின்; டாக்டர் டி.எம்.முலே, என்.எச்.ஆர்.சி உறுப்பினர்; நீதிபதி எம்.எம்.குமார், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர். தேசிய மனித உரிமை ஆணையத்தின் இணைச் செயலாளர் டி.கே.நிம்; தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
**
ANU/SMB/KPG
(Release ID: 1942752)
Visitor Counter : 167