ஜல்சக்தி அமைச்சகம்

சர்வதேச அளவில் முன்னேறிய நமாமி கங்கை இயக்கத்தின் தொடர்ச்சியான வலைதள கருத்தரங்கங்கள்

Posted On: 10 JUL 2023 11:23AM by PIB Chennai

‘இளம் மனங்களைத் தூண்டுதல்: நதிகளை புதுப்பித்தல்’ என்ற தலைப்பிலான இணைய வழி தொடர் கருத்தரங்குகளை தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் உலக அளவில் கொண்டு சென்றுள்ளது. இந்த கருத்தரங்கின் 13-வது பதிப்பு 'இளம் மனங்களைத் தூண்டுதல்: ஒரு உலகளாவிய பிரச்சாரம்’ என்ற தலைப்பில் ஜூலை 8-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்றது.

‘எதிர்காலத்தில் உலகளாவிய நிலைத்தன்மை வாய்ந்த தலைவர்களை கட்டமைப்பதற்காக இளம் தண்ணீர் சேமிப்பாளர்களின்’ பங்களிப்பை ஊக்குவிப்பது தான் இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். மழைநீர் சேமிப்பின் அவசர அவசியம், நிலையான நீர் மேலாண்மை மற்றும் நதிகளை புனரமைப்பதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இந்த நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்பட்டது.

தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ஜி. அசோக் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஐ.இ.எஸ். பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு பி.எஸ்.யாதவ், மணிபால் உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் நாராயண ஷெனாய், உலக வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் கல்வித்துறை தலைவர் டாக்டர் நீனா சிங் ஜுட்ஷி மற்றும் அரேபிய வளைகுடா பல்கலைக்கழகத்தின் மின்னணு கற்றல் வல்லுநர் திரு அர்பான் ஸ்டீஃபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

வலைதள கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய திரு அசோக் குமார், தண்ணீர் பாதுகாப்பு மற்றும் நதிகளின் புனரமைப்பில் தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மக்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிய அவர், நீர் வளங்களுக்கு உரிய மதிப்பளித்து அவற்றை பாதுகாப்பது நாட்டு மக்களின் கடமை என்றும், கூட்டு இயக்கமாக இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிலையான நீர் பயன்பாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான பொறுப்புணர்வும், இது குறித்த விழிப்புணர்வும் மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938361

***

AP/BR/GK



(Release ID: 1938465) Visitor Counter : 116