அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்திற்கு உயிரித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள் முக்கியமானவை: மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
08 JUL 2023 2:40PM by PIB Chennai
இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்திற்கு உயிரித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள் (பயோடெக் ஸ்டார்ட் அப்கள்) முக்கியமானவை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் பயோடெக்னாலஜி துறையின் உயிரி உற்பத்தி முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல் கூட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 8 முதல் 9 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50 உயிரித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே நாட்டில் இருந்தன என்று கூறினார். இப்போது நாட்டில் இந்தப் பிரிவில் சுமார் 6,000 நிறுவனங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இது இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, உயிரி தொழில்நுட்பத் திறனை நாட்டில் மிகச் சிறப்பாக மேம்படுத்தி இருப்பதாகவும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயிரி தொழில்நுட்பப் பொருளாதாரம் சுமார் 8 பில்லியன் டாலராக இருந்தது எனவும் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இது 100 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2025-ம் ஆண்டுக்குள் 150 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இதை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவில் ஏராளமான உயிரித் தொழில்நுட்ப வளங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். நாட்டில் 7,500 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதி உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். கடலுக்கு அடியில் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான சமுத்திரயான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பயோடெக்னாலஜி எனப்படும் உயிரித் தொழில் நுட்பத் துறை இளைஞர்களிடையே ஆர்வமுள்ள விருப்பத்துறையாக உருவெடுத்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
உலக உயிரி உற்பத்திப் பொருட்கள் தினத்தை குறிக்கும் வகையில், சமூக ஊடக பிரச்சார இயக்கத்தையும் இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
***
AD/PLM/KRS
(Release ID: 1938215)
Visitor Counter : 163