பிரதமர் அலுவலகம்

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் சுமார் ரூ. 6,100 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

ரூ 5,550 கோடி மதிப்பிலான 176 கிமீ நீள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

காசிப்பேட்டையில் ரூ 500 கோடி மதிப்பிலான ரயில்வே தயாரிப்பு பிரிவுக்கு அடிக்கல் நாட்டினார்

பத்ரகாளி கோயிலில் தரிசனம் & பூஜை செய்தார்

"தெலுங்கு மக்களின் திறன்கள் எப்போதும் இந்தியாவின் திறன்களை மேம்படுத்தியுள்ளன"

"இன்றைய புதிய இளம் இந்தியா ஆற்றலால் நிரம்பியுள்ளது"

"காலாவதியான உள்கட்டமைப்புகளால் இந்தியாவில் வேகமான வளர்ச்சி சாத்தியமற்றது"

"சுற்றியுள்ள பொருளாதார மையங்களை இணைத்து தெலுங்கானா பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மாறி வருகிறது"

"உற்பத்தித் துறை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான மிகப்பெரிய ஆதாரமாக மாறி வருகிறது"

Posted On: 08 JUL 2023 12:46PM by PIB Chennai

தெலுங்கானா மாநிலத்தில் சுமார் ரூ 6,100 கோடி  மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாரங்கலில் அடிக்கல் நாட்டினார். ரூ 5,550 கோடி மதிப்பிலான 176 கிமீ நீள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும், காசிப்பேட்டையில் ரயில்வே உற்பத்தி அலகும் ரூ 500 கோடி  செலவில் உருவாக்கப்படும். பத்ரகாளி கோயிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜையும் செய்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தெலுங்கானா ஒப்பீட்டளவில் புதிய மாநிலமாக இருந்தாலும், அது தொடங்கப்பட்டு  9 ஆண்டுகள் நிறைவடைந்தாலும், இந்திய வரலாற்றில் தெலுங்கானா மற்றும் அதன் மக்களின் பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை என்று குறிப்பிட்டார். "தெலுங்கு மக்களின் திறன்கள் எப்போதும் இந்தியாவின் திறன்களை மேம்படுத்தியுள்ளன" என்று அவர் கூறினார். இந்தியாவை உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதில் தெலுங்கானா குடிமக்களின் கணிசமான பங்கை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவை ஒரு முதலீட்டு இடமாக உலகம் பார்க்கிறது என்று கூறினார்.

"இன்றைய புதிய இளைஞர்கள் நிறைந்த இந்தியா ஆற்றலால் நிரம்பியுள்ளது", 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் ஒரு பொற்காலத்தின் வருகையை ஒப்புக்கொண்ட பிரதமர், இந்தக் காலகட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துமாறு அனைவரையும் வலியுறுத்தினார். வேகமான வளர்ச்சியில் இந்தியாவின் எந்தப் பகுதியும் பின்தங்கியிருக்கக் கூடாது என்று வலியுறுத்திய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் தெலுங்கானாவின் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ரூ 6,000 கோடி மதிப்பிலான இன்றைய திட்டங்களுக்காக தெலுங்கானா மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

காலாவதியான உள்கட்டமைப்புகளால் இந்தியாவில் வேகமான வளர்ச்சி சாத்தியமற்றது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய இலக்குகளை அடைவதற்கு புதிய வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மோசமான இணைப்பு மற்றும் விலையுயர்ந்த தளவாடச் செலவுகள் வணிகங்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், அரசின் வளர்ச்சியின் வேகம் மற்றும் அளவுகளில் பன்மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.  நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், பொருளாதார வழித்தடங்கள்  மற்றும் தொழில்துறை வழித்தடங்கள்  நெட்வொர்க்கை உருவாக்கும் உதாரணங்களை அவர் கூறினார், மேலும் இருவழி மற்றும் நான்கு வழி நெடுஞ்சாலைகள் முறையே நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகளாக மாற்றப்படுகின்றன என்றார் அவர். தெலுங்கானாவின் நெடுஞ்சாலை இணைப்பு 2500 கிமீ முதல் 5000 கிமீ வரை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 2500 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி பல்வேறு கட்ட வளர்ச்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்கள் தெலுங்கானா வழியாக செல்கின்றன என்றும், ஹைதராபாத் - இந்தூர் பொருளாதார வழித்தடம் , சென்னை - சூரத் பொருளாதார வழித்தடம் , ஹைதராபாத் - பாஞ்சி பொருளாதார வழித்தடம்  மற்றும் ஹைதராபாத் - விசாகப்பட்டினம் இடையேயான வழித்தடங்கள் இதில் அடங்கும்.  ஒரு வகையில், சுற்றுவட்டாரப் பொருளாதார மையங்களை இணைத்து தெலுங்கானா பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மாறி வருகிறது என்று பிரதமர் தொடர்ந்தார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்ட நாக்பூரின் மன்சேரியல் - வாரங்கல் பகுதி - விஜயவாடா வழித்தடத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், தெலுங்கானாவுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவுடன் நவீன இணைப்பை வழங்கும் அதே வேளையில் மஞ்சேரியலுக்கும் வாரங்கலுக்கும் இடையிலான தூரம்  குறைக்கப்பட்டு, போக்குவரத்து சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று  அவர் கூறினார்.  "இந்தப் பகுதி பல பழங்குடி சமூகங்களின் தாயகமாக உள்ளது. ஆனால், இது  நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது", என்று அவர் கூறினார். இந்த வழித்தடமானது மாநிலத்தில் பன்மாதிரி  இணைப்புக்கான தொலைநோக்கை வழங்கும் என்றும்,  கரீம்நகர்-வாரங்கல் பிரிவின் நான்கு வழிப்பாதை ஹைதராபாத்-வாரங்கல் தொழில்துறை வழித்தடம், காகதியா மெகா ஜவுளி பூங்கா,  வாரங்கல் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்கான இணைப்பை வலுப்படுத்தும் என்றும் திரு மோடி கூறினார்.

தெலுங்கானாவில் உள்ள பாரம்பரிய மையங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய இடங்களுக்கு பயணம் செய்வது இப்போது மிகவும் வசதியாகி வருவதால், தெலுங்கானாவில் அதிகரித்த இணைப்பு, மாநிலத்தின் தொழில் மற்றும் சுற்றுலாவுக்கு நேரடியாக பயனளிக்கிறது என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், கரீம்நகரின் விவசாயத் தொழில் மற்றும் கிரானைட் தொழிலைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், அரசின் முயற்சிகள் அவர்களுக்கு நேரடியாக உதவுகின்றன என்றார். “விவசாயிகளாக இருந்தாலும் சரி, தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி, தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் பயனடைகிறார்கள். இளைஞர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளைப் பெறுகின்றனர்” என்று அவர் கூறினார்.

 

மேக் இன் இந்தியா பிரச்சாரம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு உற்பத்தித் துறை எவ்வாறு மிகப்பெரிய வேலைவாய்ப்பாக மாறுகிறது என்பதை விளக்கிய பிரதமர், நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பிஎல்ஐ திட்டத்தைக் குறிப்பிட்டார். அதிகமாக உற்பத்தி செய்பவர்கள் அரசாங்கத்திடம் இருந்து சிறப்பு உதவிகளைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும் 50 க்கும் மேற்பட்ட பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு மோடி கூறினார். இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 9 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கோடியாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி இன்று ரூ.16,000 கோடியைத் தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தைக் குறிப்பிட்ட அவர், அதுவும் பலன்களைப் பெற்று வருவதாகக் கூறினார்.

உற்பத்தித் துறையில் இந்திய ரயில்வே புதிய சாதனைகள் மற்றும் புதிய மைல்கற்களை உருவாக்குவதையும் பிரதமர் விளக்கினார்.  ‘மேட் இன் இந்தியா’ வந்தே பாரத் ரயில்கள் பற்றி எடுத்துக்காட்டிய அவர், இந்திய ரயில்வே பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நவீன பெட்டிகள் மற்றும் இன்ஜின்களை தயாரித்துள்ளது என்றார். இன்று அடிக்கல் நாட்டப்பட்ட காசிப்பேட்டை ரயில்வே உற்பத்திப் பிரிவைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இது இந்திய ரயில்வேக்கு புத்துயிர் அளிப்பதாகவும், மேக் இன் இந்தியாவின் புதிய ஆற்றலின் ஒரு பகுதியாக காசிப்பேட்டை மாறும் என்றும் கூறினார். இதன் காரணமாக இந்தப் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் பயன்பெறும் என்றும் பிரதமர் கூறினார்.

நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் பண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

பின்னணி

ரூ 5,550 கோடி மதிப்பிலான 176 கிமீ நீள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். திட்டங்களில் 108 கிமீ நீளமுள்ள மஞ்சேரியல் - வாரங்கல் பகுதி நாக்பூர் - விஜயவாடா வழித்தடத்தில்  அடங்கும். இந்தப் பிரிவானது மஞ்சேரியலுக்கும் வாரங்கலுக்கும் இடையிலான தூரத்தை சுமார் 34 கிமீ குறைக்கும், இதனால் பயண நேரம் குறைகிறது 68 கிமீ நீளமுள்ள கரீம்நகர் - வாரங்கல் பிரிவை தற்போதுள்ள இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலை அமைப்பாக மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இது ஹைதராபாத்-வாரங்கல் தொழில் வழித்தடம், காகதியா மெகா ஜவுளி பூங்கா,  வாரங்கல் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்கான  இணைப்பை மேம்படுத்த உதவும்.

 

காசிப்பேட்டையில் உள்ள ரயில்வே உற்பத்திப் பிரிவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ 500 கோடி செலவில் உருவாக்கப்படும், நவீன உற்பத்தி அலகு ரோலிங் ஸ்டாக் உற்பத்தி திறனை மேம்படுத்தும். வேகன்களின் ரோபோடிக் பெயிண்டிங், அதிநவீன இயந்திரங்கள் மற்றும் நவீன பொருள் சேமிப்பு மற்றும் கையாளுதலுடன் கூடிய ஆலை போன்ற சமீபத்திய தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் வசதிகளுடன் இது பொருத்தப்பட்டிருக்கும். இது உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் துணை அலகுகளின் வளர்ச்சிக்கு உதவும்.

***

AD/PKV/DL



(Release ID: 1938185) Visitor Counter : 161