வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஊக்கத்தொகையுடன் கூடிய உற்பத்தித் துறையில் வளர்ச்சியை மேம்படுத்தி சாதகமான வணிகச் சூழலை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 28 JUN 2023 2:26PM by PIB Chennai

ஊக்கத்தொகையுடன் கூடிய உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை மேம்படுத்தி, சாதகமான வணிகச் சூழலை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்  தெரிவித்துள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத்துறை சார்பில் ஊக்கத்தொகையுடன் கூடிய உற்பத்தித் திட்டங்கள் (பிஎல்ஐ) குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில்  கலந்து கொண்ட  அமைச்சர்  திரு பியூஷ் கோயல், ஊக்கத் தொகையுடன் கூடிய உற்பத்தித் திட்டங்களின் பயன்கள், அரசு கொள்கையின்  சாராம்சம், அமல்படுத்தும் நடைமுறைகள் ஆகியவற்றை முன்னிறுத்தியதுடன் தொழில்துறையினர் அளிக்கும் ஆதரவையும் பாராட்டினார்.

தொழிற்துறையினரின் தேவையையும், நுகர்வோரின் தேவையையும் கருத்தில் கொண்டு தரம் உயர்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில், தொழிற்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பிஎல்ஐ திட்டங்களை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளை சவாலாகக் கருதி பயனாளிகள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதிகாரிகள் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு முன்பு பயனாளிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தினால் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணமுடியும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவை உலகளாவிய  உற்பத்தி மையமாக  மாற்றவேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வைக்கிணங்க இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். இந்தக் கருத்தரங்கில் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள், தகுதிக்கான வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில், இந்தத் திட்டத்திற்கு ரூ.62,500 கோடி முதலீடு செய்யப்பட்டதன் மூலம், ரூ.6.75 லட்சம் கோடி அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவும், 3,25,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.2.56 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதி நடைபெற்றிருப்பதாகவும், 2022-23-ஆம் நிதியாண்டில் பிஎல்ஐ திட்டத்திற்கு ரூ.2,900 கோடி ஊக்கத்தொகையாக விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

***

AP/ES/KPG/KRS



(Release ID: 1935889) Visitor Counter : 159