ஜவுளித்துறை அமைச்சகம்
கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நீடித்த ஜவுளித் தொழிலில் இந்தியா முன்னோடியாக உள்ளது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
26 JUN 2023 5:13PM by PIB Chennai
கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நீடித்த ஜவுளித் தொழிலில் இந்தியா முன்னோடியாக உள்ளது என்று மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புத்தாக்கம் மற்றும் கவர்ச்சிகரமான உற்பத்தியை மேற்கொண்டு உலகிலேயே இந்திய ஜவுளித் தொழில் முத்திரைப் பதித்துள்ளதாக உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் 69-வது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சியின் தொடக்க விழாவில் பேசிய அவர் கூறினார்.
இந்தியாவின் ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆயத்த ஆடைப் பூங்கா (பிஎம் மித்ரா) 7 மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பிஎம் மித்ரா பூங்காக்கள் போக்குவரத்து செலவைக் குறைத்து தரமான பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படும் என்று அவர் தெரிவித்தார். உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதியைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த பூங்காக்கள் பயன்படும் என்று அவர் கூறினார்.
உலகத் தரத்திற்கு இந்திய ஆடைகளின் தரம் உயர்ந்திருப்பதாகக் கூறிய அமைச்சர், தரம் குறித்து நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பல்வேறு நாடுகளுடன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தங்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொள்ள இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்றும் இந்த ஒப்பந்தங்கள் இந்திய ஜவுளித்துறைக்கு பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தங்கள் மூலம், புதிய சந்தைகளை உருவாக்கி ஏற்றுமதியை அதிகரித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஜவுளித்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
***
AP/SMB/KPG/KRS
(Release ID: 1935449)
Visitor Counter : 172