பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மாலத்தீவைச் சேர்ந்த 24- வது தொகுதி அரசு அதிகாரிகளுக்கு நல் ஆளுகைக்கான தேசிய மையம் (என்.சி.ஜி.ஜி) வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளது

Posted On: 25 JUN 2023 1:35PM by PIB Chennai

வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட மாலத்தீவு குடிமைப் பணி அதிகாரிகளுக்கான 2 வார திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் (சிபிபி) 2023 ஜூன் 23 அன்று நிறைவடைந்தது. 2024 ஆம் ஆண்டிற்குள் பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத் துறையில் மாலத் தீவைச் சேர்ந்த 1,000 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களது திறன்களை மேம்படுத்த மாலத்தீவு அரசுடன் நல் ஆளுகைக்கான தேசிய மையம் எனப்படும் என்.சி.ஜி.ஜி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏற்கனவே மாலத்தீவைச் சேர்ந்த 685 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி அமைந்துள்ளது.

நிறைவு விழாவிற்கு நல் ஆளுகைக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் திரு பரத் லால் தலைமை வகித்தார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் உறுதியான முறையில் கவனம் செலுத்தும் வகையில், அதிகாரிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு, நேர்மறையான மாற்றத்தையும் முழுமையான வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்று திரு பாரத் லால் வலியுறுத்தினார்.

வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், நிதி சேவைகள் போன்ற மக்களின் தேவைகளை உறுதி செய்வதில் பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.  இந்த முன்முயற்சிகளைப் பின்பற்றி, வாழ்க்கை வசதிககளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்று அவர் கூறினார். 

குடிநீர், 24 மணி நேர மின்சாரம் மற்றும் போதுமான சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  டிஜிட்டல் புரட்சியைப் பயன்படுத்தி விரைந்து செயல்பட  வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

24 வது திறன் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சியை மாலத்தீவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.எஸ்.பிஷ்ட், இணை பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சஞ்சீவ் சர்மா மற்றும் குழுவினர் மேற்பார்வையிட்டனர்.

***

AD/PLM/DL



(Release ID: 1935216) Visitor Counter : 136