உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, சம்பாவில் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (சி.எஃப்.எஸ்.எல்) அடிக்கல் நாட்டியதுடன் ஜம்முவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 23 JUN 2023 5:19PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, சம்பாவில் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (சி.எஃப்.எஸ்.எல்) அடிக்கல் நாட்டியதுடன் ஜம்முவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு திரு அமித் ஷா திரிகுட் நகரில் அஞ்சலி செலுத்தினார். ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உட்பட பலர் வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாகம், தைரியம் மற்றும் மனஉறுதி காரணமாக, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணந்துள்ளது என்றார். டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி 1953 ஆம் ஆண்டில் 370 வது பிரிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழில் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார். டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி 370 வது பிரிவை ரத்து செய்துள்ளதாக திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

ஜம்முவில் சுமார் ரூ.309 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் அரசு, ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் முறை மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஜம்மு- காஷ்மீரில் 70 ஆண்டுகளில் 4 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே கட்டப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 15 செவிலியர் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்  கல்வி நிலையங்களும், ஜம்முவில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்பு அமலில் இருந்த 370-வது சட்டப்பிரிவு காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சி ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் 70 சதவீத அளவுக்கு பயங்கரவாதம் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ளது என்றும், இந்த கொள்கைகளால், ஜம்மு - காஷ்மீரில் முதலீடு அதிகரித்து வருவதுடன், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீருக்கு 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்பு  ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்கள் இருந்தன என்றும், இப்போது அவர்களிடம் மடிக்கணினிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த படித்த இளைஞர்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போவதாக அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் மட்டுமே இந்த மாற்றம் சாத்தியமானது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

******

AP/PLM/RS/KRS(Release ID: 1934848) Visitor Counter : 164