சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜெனீவாவில், வளர்இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் நலன் தொடர்பான ஜி 20 நிகழ்ச்சியைமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்
Posted On:
20 JUN 2023 3:39PM by PIB Chennai
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான திறன் இளைஞர்களின் வலிமையால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் தேவையான வாய்ப்புகளை வழங்கும்போது இளைஞர்கள் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மத்திய சுகாதார அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பின் தாய், சேய் நலத்துக்கான கூட்டமைப்பும் (பி.எம்.என்.சி.எச்) இணைந்து ஜெனிவாவில் ஏற்பாடு செய்த 'இளைஞர்களின் ஆரோக்கியம் - தேசத்தின் வளம்' என்ற ஜி 20 தொடர்பான நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகெங்கிலும் உள்ள 180 கோடி வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தேவைகளை முன்னிலைப்படுத்துவதை இந்நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
இளைஞர்களுக்குத் தேவையான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முன்னுரிமையை இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி அனைவரையும் உள்ளடக்கிய, லட்சியத்துடன் கூடிய, உறுதியான செயல்பாடுகள் சார்ந்ததாக இருக்கும் என்பதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதி மொழி எனவும், இது உலகிற்கு நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
வலுவான கட்டமைப்பை உருவாக்க அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சி அவசியம் என்றும் இதை முன்னெடுத்துச் செல்ல, ஜி 20 நாடுகளை ஊக்குவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் பிரதமர் திரு நரேந்திர மோதியின் தலைமையின் கீழ், இளைஞர்களின் நலனுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மிகப் பெரிய இளைஞர் சக்தியைக் கொண்ட நாடு இந்தியா என்று இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திருமதி பாரதி பிரவீன் பவார் குறிப்பிட்டார். நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார். இளைஞர்களின் ஆற்றல், சிந்தனைகள் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை தேசத்தின் எதிர்கால பாதையை வடிவமைக்கும் என்று திருமதி பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் பூஷண், பி.எம்.என்.சி.எச் வாரியத் தலைவர் திருமதி ஹெலன் கிளார்க், தென்னாப்பிரிக்காவின் துணை சுகாதார அமைச்சர் திரு. சிபோங்கிசெனி த்லோமோ, ஐநா மக்கள் தொகை நிதிய (யு.என்.எஃப்.பி.ஏ) தலைமையகத்தின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஜூலிட்டா ஒனபன்ஜோ, ஈராக்கை நாட்டைச் சேர்ந்த இளைஞர் அமைப்பினர் பிரதிநிதி திருமதி துகா அல்பக்ரி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
******
SM/PLM/MA/KRS
(Release ID: 1933701)
Visitor Counter : 206