தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சர்வதேச யோகா தினத்தையொட்டி ஊடக விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது


யோகா தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஊடகங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுகிறது: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்

யோகா குறித்தப் புரிதலையும், ஊக்குவிப்பையும் ஏற்படுத்துவதில் ஊடகங்கள் ஊக்க சக்தியாக விளங்குகின்றன: அனுராக் தாக்கூர்

Posted On: 09 JUN 2023 5:42PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இரண்டாவது ஊடகத் துறை விருதுகள் தொடர்பான அறிவிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று (09.06.2023) வெளியிட்டுள்ளது.

2023-ம் ஆண்டுக்கான விருதுகளில், 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் செயல்படும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய மூன்று பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படுகின்றன.

1) செய்தித்தாள்களில் யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக செய்தித் தாள் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் செய்தித் தாள்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

2) மின்னணு ஊடகங்களில் (தொலைக்காட்சி) யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக தொலைக்காட்சிப் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

3) மின்னணு ஊடகங்களில் (வானொலி) யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக வானொலிப் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் வானொலி நிறுவனங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

     2023 ஆம் ஆண்டிற்கான விருதுகள் தொடர்பான  அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றும் இதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

தேசங்களின் எல்லைகள் மற்றும் கலாச்சாரங்களைத் தாண்டி, யோகா கோடிக் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான அணுகுமுறை காரணமாக யோகா பலரது ஆர்வத்தை ஈர்த்து, உலகளாவிய நிகழ்வாக இந்த யோகா தினம் மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதிலும், யோகாவின் திறன்களை வெளிப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்றும் அவற்றின் முயற்சி இல்லாமல் யோகா தொடர்பான தகவல்களை பெரிய அளவில் பிரபலப்படுத்தி இருக்கும் இந்த முயற்சி சாத்தியமாகியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச யோகா தின விருதுகளை இரண்டாவது முறையாக வழங்கத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகா தொடர்பான தகவல்களைப் பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுவதாக அவர் கூறினார். யோகா என்ற பழமையான கலையையும் அதன் பல நன்மைகளையும் ஊக்குவிப்பதில் ஊடகங்களுக்கு உள்ள மகத்தான சக்தியையும் பொறுப்பையும் அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

யோகா தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும், அதை ஊக்குவிக்கவும், ஊடகங்கள் ஒரு ஊக்க சக்தியாக விளங்குவதாகவும் அவர் கூறினார். அனைத்து வயதினரும், எல்லா பின்னணி கொண்டவர்களும், பின்பற்றக் கூடிய உலகளாவிய நடைமுறையாக யோகாவைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் வெற்றி பெற்றுள்ளன என்று திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இந்த விருதுகள் ஒரு சுதந்திரமான நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

10.06.2023 முதல் 25.06.2023 வரையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் யோகா தொடர்பான கட்டுரைகள் அல்லது ஒளிபரப்பப்படவுள்ள ஆடியோ/வீடியோ உள்ளடக்கங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விருதுக்கு விணன்ணப்பிக்கும்போது அவை தொடர்பான காட்சிகள் மற்றும் விவரங்களை, குறிப்பிட்ட வடிவத்தில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விருது தொடர்பான படைப்புகளைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கக் கடைசி தேதி 2023 ஜூலை 1 (01.07.2023) ஆகும்.

இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் இணையதளமான https://pib.gov.in/indexd.aspx மற்றும் தகவல் ஒலிபரப்பு  அமைச்சகத்தின் இணையதளமான https://mib.gov.in/ ஆகியவற்றில் காணலாம்.

சர்வதேச யோகா தின ஊடக விருதுகள்

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டும் வகையில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2019-ம் ஆண்டில் முதலாவது சர்வதேச யோகா தின ஊடக விருதுகளை (AYDMS) அறிவித்தது. அந்த விருது 07.01.2020 அன்று வழங்கப்பட்டது. அதன் பின்னர் கொவிட் பெருந்தொற்று பாதிப்புக் காரணமாக  இந்த விருதில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது அந்த விருதுகளை மீண்டும் வழங்க தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931053                      

                                     ************

AP/PLM/GK



(Release ID: 1931138) Visitor Counter : 188