ஆயுஷ்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஐதராபாத்தில் நாளை மாபெரும் யோகா பெருவிழா : தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் திரு கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

Posted On: 26 MAY 2023 4:53PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மெரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தால் ஐதராபாத்தில் நாளை (மே 27) மாபெரும் யோகா பெருவிழா நடைபெற உள்ளது. ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சர்வதேச  யோகா தினத்திற்கு 25 நாட்கள் உள்ளதை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கிஷண் ரெட்டி, ஆயுஷ்துறை இணையமைச்சர் திரு முஞ்சப்பாரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இது தொடர்பாக  புதுதில்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் திரு சர்பானாந்த சோனோவால், இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டங்கள் தொடர்பான ஏற்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர  மோடியின் முயற்சியால் யோகா உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகாவின் பங்களிப்பை உலகம் தற்போது உணர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தின் பிரதான நிகழ்ச்சி  மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷண் ரெட்டி, யோகா உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.

 இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆயுஷ்துறை இணையமைச்சர் திரு முஞ்சப்பாரா மகேந்திரபாய், மக்களுக்கு பொதுவான யோகா நடைமுறைகள் தொடர்பான பயிற்சி அளிக்க, நாடு முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

                                                                                                          ******

AD/PLM/MA/KPG

 (Release ID: 1927551) Visitor Counter : 110