உள்துறை அமைச்சகம்
2023 மே 23-25-ம் தேதி வரை நடைபெறும் ஜி-20 பேரிடர் ஆபத்து குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பேரிடர் ஆபத்துக்கான நிதியுதவிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
Posted On:
22 MAY 2023 5:21PM by PIB Chennai
ஜி-20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் மும்பையில் 2023 மே 23-25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மும்பையில் அடுத்த மூன்று நாட்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறவுள்ளன. 2023 மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளின் காந்தி நகரில் நடைபெற்ற முதல் பேரிடர் ஆபத்து குறைப்பு பணிக்குழுவின் தொடர்ச்சியாக, இந்தக் கூட்டத்தில் உயர்மட்ட விவாதங்கள் நடத்தப்படவுள்ளன.
பேரிடர் இடர் குறைப்பு பணிக்குழு என்பது ஜி-20-யின் துணை அமைப்பாகும். இது உலகளவில் பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜி-20 நாடுகள் பெருகிவரும் பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அபாயங்களுடன் போராடி வருகின்றன. இதனால் ஏற்படும் ஆண்டு சராசரி இழப்பு 218 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது உட்கட்டமைப்பில் சராசரி வருடாந்திர முதலீட்டில் 9% என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இரண்டாவது பேரிடர் ஆபத்து குறைப்பு பணிக்குழு கூட்டம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. பேரிடர் அபாயக் குறைப்பு நிதி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
கூடுதலாக, தேசிய கட்டமைப்பை நிறுவுதல், தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு தலைப்புகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன. இரண்டாவது பேரிடர் ஆபத்து குறைப்பு பணிக்குழு கூட்டத்தில் ஜி-20 உறுப்பு நாடுகள், அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய வெளியுறவு அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
******
AD/CR/KRS
(Release ID: 1926447)
Visitor Counter : 206