பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 MAY 2023 3:59PM by PIB Chennai

ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, மாநில முதலமைச்சர் திரு அசோக் கெலாட் அவர்களே, சட்டமன்ற சபாநாயகர் திரு சி.பி.ஜோஷி அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!

5000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தின் இணைப்பை இந்தத் திட்டங்கள் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். மாநிலங்களின் வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தில் இந்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ராஜஸ்தானும் ஒன்று. இந்த மாநிலத்தின் வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும். அதனால்தான் நமது அரசு ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

நண்பர்களே,

இன்று நாடு முழுவதும் அனைத்து வகையான உள்கட்டமைப்புகளிலும் இதுவரை இல்லாத அளவில் அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன. உள்கட்டமைப்பின் மீது இத்தகைய மிகப்பெரிய முதலீடு செய்யப்படுவது, அந்தப் பகுதியின் முன்னேற்றத்திலும் வேலைவாய்ப்புகளிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், வீடுகள், கழிவறைகள் முதலியவை அமைக்கப்படும் போதும், கிராமங்களில் தொழில்நுட்ப வசதி வழங்கப்படும் போதும், தண்ணீர்க் குழாய் இணைப்பு அளிக்கப்படும் போதும் இது போன்ற பொருட்களை விநியோகம் செய்யும் சிறிய வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவார்கள். இந்திய அரசின் இது போன்ற திட்டங்கள் பொருளாதாரத்திற்கு புதிய உந்துசக்தியை அளித்துள்ளது.

சாலைகளை அமைத்து கிராமங்களை இணைப்பது மட்டுமல்லாமல், நவீன நெடுஞ்சாலைகளின் வாயிலாக நகரங்களை இணைக்கும் பணியிலும் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது தேசிய நெடுஞ்சாலையின் கட்டமைப்பு பணிகள் இரண்டு மடங்கு வேகமாக நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் இணைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக சுற்றுலா மற்றும் புனித யாத்திரை தலங்களும் பயனடைந்துள்ளன.

பொது மக்களுக்கு வாழ்க்கைக்கான வசதிகளை சிறப்பாக ஏற்படுத்தி கொடுப்பதற்கு நமது அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும் மேம்பட்ட வசதிகள், மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நமது அரசு அயராது பணியாற்றி வருகிறது. வளர்ச்சித் திட்டங்களை பெற்ற உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

******

(Release ID:1923101)

AD/BR/RR

 



(Release ID: 1926297) Visitor Counter : 131