தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மகளிர் சக்தி உருவெடுக்கிறது : டாக்டர். எல்.முருகன்

பெண்கள் ஏற்கனவே பிரகாசிக்கிறார்கள், தொடர்ந்து பிரகாசிப்பார்கள்: டாக்டர். எல்.முருகன்

Posted On: 19 MAY 2023 5:30PM by PIB Chennai

கேன்ஸ் திரைப்பட விழாவில்,  இந்தியா அரங்கில் 4வது நாள், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பெண்களின் பங்கு பற்றிய  அமர்வுடன் தொடங்கியது. 'அவள் ஒளிர்கிறாள்' என்ற தலைப்பிலான அமர்வில் நடிகையும்,  தயாரிப்பாளருமான  குஷ்பு சுந்தர் நெறியாளராக பங்கேற்றார். நடிகை ஈஷா குப்தா, கிரேக்க-அமெரிக்க இயக்குனர் டாப்னே ஷ்மோன், திரைப்பட இயக்குநர்கள் மதுர் பண்டார்கர், சுதிர் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நடிகை குஷ்பு சுந்தர் அமர்வைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், “ நடிப்பதுடன், தயாரிப்பு,  இயக்கம்,  தொழில்நுட்பக் கலைஞர்கள் என பெண்கள்  முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு அழகான கட்டத்தை இந்திய சினிமா தன்னகத்தே கொண்டிருக்கிறது’’ என்று கூறினார்.

பெண் சக்தியுடன் கூடிய ஆக்கப்பூர்வமான பொருளாதாரம் பற்றி பண்டார்கர் பேசினார். “படத்தின் நாயகியாக ஒரு பெண் இருக்கும்போது நிதி சேகரிப்பது கடினம், ஆனால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்ற, தேசிய அளவில் வெற்றியைப் பெற்ற படங்களைத் தயாரித்தது எனது அதிர்ஷ்டம்." என்று அவர் கூறினார்.

 “நான் சாந்தினி பாருடன் தயாரிப்பாளரிடம் சென்றபோது, யாரும்  பணம் போட விரும்பவில்லை. நான் பல ஹீரோக்களை வைத்து த்ரிசக்தி என்ற படத்தை எடுக்க வேண்டியிருந்தது. படம் சரியாக ஓடவில்லை. பின்னர் நான் சாந்தினி பார் தயாரிக்க முடிவு செய்தேன், இறுதியாக ஒரு தயாரிப்பாளரை குழுவில் சேர்த்தேன். அதிர்ஷ்டவசமாக சாந்தினி பார் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. அதுவே, பெண்களை மையமாக வைத்து அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் தைரியத்தை எனக்குக் கொடுத்ததாக நினைக்கிறேன் என்றார் அவர்.

ஈஷா குப்தா தனது அனுபவத்தைப் பற்றி பேசுகையில், “இந்த ஆண்டு நான் தொழில்துறையில் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்தேன், 2019 வரை ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு கனவாகவே இருந்தது. என்னை ஒரு பெண் காவலரின் மையக் கதாபாத்திரத்தில் வைத்து அனுபம் கெர் மற்றும் குமுத் மிஸ்ராவை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க முயற்சித்தோம், ஆனால் படத்திற்கு நிதி கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. படம் திரையரங்குகளில் வந்தபோது, அது சரியாக ஓடவில்லை, ஆனால் படம் நெட்ஃபிளிக்ஸில் வந்தபோது, அது பரவலாகப் பார்க்கப்பட்டது. பார்வையாளர்கள் பெண் கதைகளைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இப்போது விசயங்கள் மாறி வருகின்றன, ஆனால் எங்கள் கதைகளில் நம்பிக்கை கொண்ட இன்னும் அதிகமான இயக்குனர்கள் எங்களுக்குத் தேவை." என்று குறிப்பிட்டார்.

ஸ்ருதிஹாசனை வைத்து ‘தி ஐ’ படத்தை இயக்கிய டாப்னே ஷ்மோன், “படம் பார்க்கும் பார்வையாளர்களில் 51 சதவீதம் பேர் பெண்கள் என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். நம் கதைகளை திரையில் பார்க்க வேண்டும். பெண் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் முன்னணியில் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் படங்களுக்கு நிதியுதவி பெற உதவுகிறோம். ஆண்களையும் பெண்களையும் கலைஞர்களாக சமமாகப் பார்ப்பது முக்கியம்.” என்றார்.

பல்வேறு துறைகளில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு அரசு எவ்வாறு பங்களிக்கிறது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் விளக்கினார்.  “பெண்கள் உண்மையிலேயே பிரகாசிக்கின்றனர். சினிமாவில் தொடர்ந்து பிரகாசிப்பார்கள். நான் சினிமாவை பெண் அல்லது ஆண் மைய சினிமாவாக பார்க்கவில்லை. பெண்களை மையமாக வைத்து மகளிர் மட்டும் என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படம் வந்தது, அது உண்மையில் நன்றாக இருந்தது. வித்யா பாலன் பெண்களை மையப்படுத்தும் கதைகளில் நன்றாக நடிக்கிறார்.  பேட்மேன் போன்ற பெண்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து படங்கள் வருகின்றன. பெண் படைப்பாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஷீ ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என்ற திரைப்பட விழா உள்ளது, ஐஸ்வர்யா சுந்தர் ஒரு அனிமேஷன் படத்தை எடுத்தார், அது தேசிய விருதை வென்றது.  குணீத் ஆஸ்கார் விருதை வென்றார். சினிமாவில் அழகான இடத்தை உருவாக்குவதில் நம் பெண்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மகளிர் சக்தி வலிமையாக உருவாகி வருகிறது. திரைப்படத் துறையில் 100க்கும் மேற்பட்ட பெண் படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம்  எவ்வாறு பயிற்சி அளித்துள்ளது என்பது பற்றி டாக்டர் முருகன் பேசினார். நாளைய 75 படைப்பாற்றல் திறனாளிகள் முன்முயற்சியில், இந்த ஆண்டு 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என அவர் கூறினார்.

"பெண்கள் சக்திக்காக அரசு பல திட்டங்களை அர்ப்பணித்துள்ளதாக கூறி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

******



(Release ID: 1925596) Visitor Counter : 155