வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த 6-வது இந்தியா- கனடா அமைச்சகங்கள் அளவிலான பேச்சுவார்த்தைக் கூட்டம்
Posted On:
10 MAY 2023 10:10AM by PIB Chennai
கனடா நாட்டின் ஒட்டாவாவில் கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த 6-வது இந்தியா- கனடா அமைச்சகங்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், கனடா நாட்டின் சர்வதேச வர்த்தகம், ஏற்றுமதி ஊக்குவிப்பு, சிறு வணிகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேதகு மேரி என்ஜி ஆகியோர் தலைமை வகித்தார்கள். இந்தியா மற்றும் கனடா இடையே வலுவான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுமுறையின் அவசியத்தை அமைச்சர்கள் வலியுறுத்தியதோடு, இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார கூட்டுமுயற்சியை மேம்படுத்தும் குறிப்பிடத்தக்க வாய்ப்பையும் பாராட்டினார்கள்.
இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பிற்கும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக் குழுவிற்கும் அமைச்சர் மேரி என்ஜி தமது ஆதரவை வழங்கினார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சக கூட்டத்தில் கலந்து கொள்ள ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தூய்மையான தொழில்நுட்பம், முக்கியமான தாதுக்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலன்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி/ ஹைட்ரஜன் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். இந்தியா- கனடா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஏழு கட்ட பேச்சு வார்த்தைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
புதிய முன்னுரிமைகளுடன் கனடா-இந்தியா தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தை புதுப்பித்து, மீண்டும் தொடங்க அமைச்சர்கள் இசைவு தெரிவித்தனர். வர்த்தக உறவை மேம்படுத்தும் தளமாக இந்த மன்றம் விளங்கும். மிகப்பெரிய வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய குழுவிற்கு தலைமை தாங்கி, வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவிருப்பதாக அமைச்சர் மேரி என்ஜி அறிவித்தார். இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை இது மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இருதரப்பு புத்தாக்க சூழலியலை வலுப்படுத்துவதற்கு திறமைகள் மற்றும் புத்தாக்க கூட்டுமுயற்சி குறித்து ஆலோசிப்பதற்கு தகுந்த நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாகவும் அமைச்சர்கள் விவாதித்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1922979
***
(Release ID: 1922979)
AD/BR/KPG
(Release ID: 1923042)
Visitor Counter : 219