வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

குப்பை மேடுகளை அகற்றுவதன் மூலம் நகரங்களை அழகுபடுத்தும் பணியில் முன்னேற்றம்

Posted On: 04 MAY 2023 2:51PM by PIB Chennai

நகர்ப்புறங்களை அழகுபடுத்துவதற்கு குப்பைக் கிடங்குகள் மற்றும் திறந்தவெளி குப்பை மேடுகள் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் 2.0-வின்  கீழ், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நகர்ப்புறங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளை மாற்றுவது காலத்தின் தேவை என்று உணரப்பட்டது. பல மாநிலங்கள் நகர்ப்புறங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளை மாற்றுவதற்கும், அழகுபடுத்துவதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது நிலையான வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான, பசுமையான எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும்.

நகர்ப்புறங்களிலுள்ள குப்பை மேடுகளை அகற்றி அழகுபடுத்தியதற்கு போபால் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிரதமர் திரு.நரேந்திர மோடியால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.  போபால் - டெல்லி இடையே பயணிக்கும் வந்தே பாரத் விரைவு ரயில், பசுமை மண்டலமாக மாறிய இந்த குப்பைக் கிடங்கைக்  கடந்து செல்கிறது. இத்திட்டத்தில் 37 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.

நவி மும்பை நகர்ப்புறங்களை பயனுள்ளதாக மாற்றுகிறது

நவி மும்பை மாநகராட்சி (NMMC) பாலங்கள்/மேம்பாலங்களின் கீழுள்ள பகுதிகளை பொழுதுபோக்கு வசதிகளாக மாற்ற திட்டமிட்டது. சன்படா மேம்பாலத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பொது விளையாட்டு வளாகமே இதற்கு உதாரணம். சன்படா மேம்பாலம் திட்டத்தின் வெற்றி நவி மும்பையை எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த ஊக்கமளித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு கான்சோலி-தலாவாலே பாலம்  புதிய ஓவியங்கள் மற்றும் விளக்குகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த ஆண்டு, இப்பகுதி தோட்டமாகவும், தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் மாற்றப்படும். சன்படா பாலத்தின் இரண்டாவது பகுதியில் யோகா மையம் அமையவுள்ளது.

குப்பை மேடுகளை அகற்ற சூரத்தின் ஆக்கபூர்வமான முயற்சி

சூரத்தில் குப்பைக் கிடங்குகளை பொதுமக்கள் அமரும் இடமாக மாற்றியது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் கீழ், சூரத் மாநகராட்சி குப்பைக் கிடங்குகளை அடையாளம் கண்டு, அங்கு இருக்கைகள், விளக்குகள் மற்றும் குப்பைத் தொட்டிகளை அமைத்து அனைவரும் கூடி அமரும் இடமாக மாற்றியது. 100% குப்பை சேகரிப்பை உறுதி செய்வதற்காக சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணியை மாநகராட்சி உறுதி செய்கிறது.

பாட்னாவின் தூய்மைப் பயணம்: குப்பை கிடங்குகள் பசுமை மண்டலங்களாக மாறின

பாட்னா நீண்ட காலமாக குப்பைக் கிடங்குகளால் போராடி வருகிறது. இந்த குப்பைக் கிடங்குகளை பசுமை மண்டலங்களாக மாற்றுவதற்கும், நிலையான சூழலை மேம்படுத்துவதற்கும், பாட்னா மாநகராட்சி பெரிய அளவில் குப்பைக் கிடங்குகளை சீரமைக்கும் இயக்கத்தைத் தொடங்கியது. இதில் நகரம் முழுவதும் மொத்தம் 630 குப்பைக் கிடங்குகள் சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டன.

630 குப்பைக் கிடங்குகளின் சீரமைப்பு

பாட்னா மாநகராட்சி, குப்பை கிடங்குகளை பசுமை மண்டலங்களாக மாற்றும் இயக்கத்தைத் தொடங்கியது. சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டு, தூக்கி எறியப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட இருக்கைகளை வைத்து அழகுபடுத்தப்பட்டன.

                                                   ***

AD/CR/KPG



(Release ID: 1921958) Visitor Counter : 157