அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியா - இஸ்ரேல் இடையே தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 04 MAY 2023 10:43AM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகத்திற்கும் இடையே தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகத்தின் தலைவர் டாக்டர் டானியல் கோல்ட் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். குறிப்பிட்ட திட்டங்களை அமல்படுத்துவதன் வாயிலாக பரஸ்பர ஒத்துழைப்புடன் தொழில்துறையின் தொழில்நுட்பம் சார்ந்த  துறைகளில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை ஏற்படுத்தும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள வேளையில் பிரதமரின் தலைமையின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு இது ஒரு முக்கிய வருடம் என்று கூறினார். இந்தியா, இஸ்ரேல் இடையேயான தூதரக உறவு, 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சுகாதாரம், விண்வெளி மற்றும் மின்னணுவியல், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், எரிசக்தி கருவிகள், சுற்றுச்சூழல், புவி மற்றும் பெருங்கடல் அறிவியல், நீர் உள்ளிட்ட நிலையான எரிசக்தி, சுரங்கம், கனிம வளங்கள், உலோகங்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளில் திட்டங்களை அமல்படுத்த இந்த ஒப்பந்தம் ஏதுவாக இருக்கும்.

                                                                                                                                ***

AP/RB/RR



(Release ID: 1921894) Visitor Counter : 164