பிரதமர் அலுவலகம்
காசியில் நடைபெற்ற காசி - தெலுங்கு சங்கமத்தில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
Posted On:
29 APR 2023 8:26PM by PIB Chennai
வணக்கம்! உங்கள் அனைவருக்கும் கங்கா-புஷ்கரலு விழா நல்வாழ்த்துகள்! நீங்கள் அனைவரும் காசிக்கு வந்திருப்பதால், நீங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் எனது விருந்தினர்கள்; ஒரு விருந்தினர் கடவுளுக்கு நிகரானவர் என்று நாங்கள் நம்புகிறோம். சில பணிகள் காரணமாக உங்களை வரவேற்க என்னால் அங்கு வரமுடியவில்லை என்றாலும், உங்கள் அனைவருக்கிடையிலும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த கங்கா-புஷ்கரலு விழா கங்கையும், கோதாவரியும் ஒன்றாகக் கலப்பது போன்றது. சில மாதங்களுக்கு முன் இந்த காசி மண்ணில் காசி-தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டது நினைவிருக்கலாம். சில நாட்களுக்கு முன்புதான் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும் பாக்கியமும் கிடைத்தது.
நண்பர்களே,
காசிக்கும் அதன் மக்களுக்கும் தெலுங்கு மக்களுடன் ஆழமான தொடர்பு உண்டு என்பது காசியுடன் தொடர்புடைய அனைவருக்கும் தெரியும். தெலுங்கர் ஒருவர் காசிக்கு வந்தவுடன், காசி மக்கள் தங்கள் சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்துவிட்டதாகவே உணர்வர். இன்றும், காசிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் கணிசமான விகிதத்தில் உள்ளனர். தெலுங்குப் பகுதி காசிக்கு எத்தனையோ மகான்களையும், முனிவர்களையும் கொடுத்திருக்கிறது. தைலங்க சுவாமி விஜயநகரத்தில் பிறந்தவர் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.
சகோதர சகோதரிகளே,
காசி எப்படி தெலுங்கு மக்களை தத்தெடுத்து அரவணைத்ததோ, அதே போல தெலுங்கு மக்கள் காசியை தங்கள் இதயத்திற்கு நெருக்கமாக வைத்துள்ளனர். புனித தலமான வெமுலவாடா தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா கோயில்களில் கைகளில் கட்டப்படும் கருப்பு நூல் இன்றும் காசி தரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வளவு தூரமாக இரு நகரங்கள் எப்படி எப்படி இதயத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன என்பது வெளியில் இருந்து பார்ப்போருக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கும்! ஆனால் இதுதான் இந்தியாவின் பாரம்பரியம். 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நம்பிக்கையை பல நூற்றாண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
நண்பர்களே,
ஒரு காலத்தில் தெலுங்கு மக்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து காசிக்கு வருவர். அவர்கள் தங்கள் பயணத்தில் பல தடைகளை எதிர்கொண்டனர். நவீன காலத்தில், அந்த சூழ்நிலைகள் வேகமாக மாறி வருகின்றன. ஒரு காலத்தில் விமான நிலையத்திலிருந்து தசாஷ்வமேத் காட் சென்றடைய பல மணிநேரம் ஆகும். இன்று, புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருப்பதால், மக்களின் நேரம் மிச்சமாகியுள்ளது. ஒரு காலத்தில் காசியின் தெருக்களில் மின் கம்பிகள் தொங்கிக் கொண்டிருந்தன. தற்போது காசியில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பிகள் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
பாபாவின் ஆசீர்வாதமும், காலபைரவர் மற்றும் அன்னபூரணியின் தரிசனமும், கங்கையில் நீராடுவது உங்கள் ஆன்மாவை மகிழ்ச்சியடையச் செய்யும். அங்கு மரத்தாலான எட்டிகொப்பகா பொம்மைகள் பிரபலமாக இருப்பது போல, பனாரஸும் மர பொம்மைகளுக்கு பெயர் பெற்றது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த நண்பர்கள் மரத்தாலான பனாரஸ் பொம்மைகள், பனாரஸ் புடவைகள், பனாரஸ் இனிப்புகள் மற்றும் பல பொருட்களைத் திரும்ப எடுத்துச் செல்லலாம். இவை உங்கள் மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும்.
நண்பர்களே,
காசியில் விஸ்வநாதர் இருந்தால், ஆந்திராவில் மல்லிகார்ஜுனனும், தெலுங்கானாவில் ராஜ ராஜேஸ்வரரும் உள்ளனர். இத்தகைய புனித இடங்கள் அனைத்தும் இந்தியாவின் முக்கியமான மையங்கள் ஆகும். நாட்டின் இந்த பன்முகத்தன்மையை நாம் ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் நம் முழுமையை நம்மால் அறிய முடியும்; கங்கா-புஷ்கரலு போன்ற விழாக்கள் இந்த எண்ணத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த எதிர்பார்ப்புடன், மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களின் இந்தப் பயணம் பலனளிக்கட்டும். காசியிலிருந்து புதிய நினைவுகளை மீட்டெடுத்து உங்கள் மனதில் தெய்வீகத்தன்மையை நிரப்பட்டும். இதைத்தான் பாபாவின் பாதத்தில் வேண்டிக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பு : இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
***
AD/CR/KPG
(Release ID: 1921695)
Visitor Counter : 169
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam