நிதி அமைச்சகம்
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கை 5.20 கோடியை கடந்தது
Posted On:
27 APR 2023 2:37PM by PIB Chennai
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கை 31, மார்ச், 2023-ன் படி, 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மேலாண்மையின் கீழ், இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ.27,200 கோடியாக உள்ளது. இந்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 8.69 சதவீதம் முதலீட்டு லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் 9 வங்கிகள் ஆண்டு இலக்கை எட்டியுள்ளன. பேங்க் ஆப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றின் ஒரு கிளைக்கு 100-க்கும் மேற்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
பிராந்திய ஊரக வங்கிகளில் 32 வங்கிகள் ஆண்டு இலக்கை அடைந்துள்ளன. ஜார்க்கண்ட் ராஜ்ஜிய கிராமிய வங்கி, விதர்பா கொங்கன் கிராமிய வங்கி, திரிபுரா கிராமிய வங்கி, பரோடா உத்தரப்பிரதேச கிராமிய வங்கி ஆகியவற்றின் ஒரு கிளைக்கு 160-க்கும் மேற்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தனலட்சுமி வங்கி, ஏர்டெல் பேமண்ட் வங்கி ஆகியவை நிதியமைச்சகம் விதித்த ஆண்டு இலக்கை எட்டியுள்ளன.
மேலும், பீகார், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், சதீஷ்கர். ஒடிசா, உத்தராகண்ட் ஆகிய 12 மாநிலங்கள் தங்களுடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் உதவியுடன் ஆண்டு இலக்கை அடைந்துள்ளன.
AP/IR/RS/KRS
***
(Release ID: 1920201)
Visitor Counter : 197