பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

Posted On: 26 APR 2023 9:46PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி  உரையாற்றினார்.

அடுத்த மாதம் 6-வது ஆண்டை நிறைவு செய்யவுள்ள ரிபப்ளிக் குழுவினருக்கு தமது உரையின்போது பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்திய பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அளவை எட்டுவதற்கு 60 ஆண்டுகள் தேவைப்பட்டது என்றும், 2014-ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு இடையே 2 ட்ரில்லியனை அடைந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பெருந்தொற்றுக்கு இடையேயும், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியதை அவர் சுட்டிக்காட்டினார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் கூட ஸ்தம்பித்துள்ள வேளையில், நெருக்கடியிலிருந்து இந்தியா மீண்டு வந்ததோடு, விரைவாக முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.

2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய அரசு கொண்டு வந்த கொள்கைகள், முதல் தர பயன்களை மட்டுமல்லாது, அவற்றின் இதர தாக்கங்களிலும் கவனம் செலுத்தியதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தினால் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3.75 கோடியாக உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். இத்திட்டம், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் தன்னம்பிக்கையை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது, என்றார் அவர். முத்ரா திட்டத்தின் கீழ் 40 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 70% பயனாளர்கள் பெண்கள் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நேரடி பயன் பரிவர்த்தனை, மின்சாரம், தண்ணீர் வசதிகள் வழங்கும் திட்டங்கள் உள்ளிட்டவை அடிமட்ட அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய பிரதமர் திரு மோடி, “முதன்முறையாக நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும் கிடைத்துள்ளது”, என்று தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் தலித்துகள், நலிவடைந்தோர், பழங்குடிகள், பெண்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைவரும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் நிதி கணக்கு, ஆதார் மற்றும் செல்பேசி அடங்கிய ஜாம் திட்டத்தின் வாயிலாக 10 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், 45 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, சுமார் ரூ. 28 லட்சம் கோடி பயனாளிகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டு அரசின் திட்டங்களில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “இந்த சுதந்திரத்தின் அமிர்த காலம், ‘அனைவரின் முயற்சிக்கு' ஏற்ற தருணம். ஒவ்வொரு இந்தியரின் கடின உழைப்பும், வலிமையும்  செயல்பாட்டிற்கு வரும்போது, வளர்ந்து இந்தியா என்ற கனவை நிறைவேற்ற முடியும்”, என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1920067

***

 (Release ID: 1920067)

AD/RB/SG


(Release ID: 1920170) Visitor Counter : 166