பிரதமர் அலுவலகம்
திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் துவக்கி வைக்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
25 APR 2023 2:36PM by PIB Chennai
வணக்கம்!
கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, கேரள அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சசி தரூர் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே. இன்று கேரள மாநிலம் தனது முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையைப் பெற்றுள்ளது. நீர்வழி மெட்ரோ போக்குவரத்து, ரயில்வே சம்பந்தமான பல்வேறு திட்டங்கள் வடிவத்தில் புதிய பரிசுகள் கொச்சி நகரத்திற்கு கிடைத்துள்ளன.
சகோதர, சகோதரிகளே,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்நிலை குறித்து நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். உலக நாடுகளின் நிலவரம் பற்றியும் அவற்றின் பொருளாதார நிலை குறித்தும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகளாவிய சூழல்களுக்கு இடையேயும் வளர்ச்சிக்கு உகந்த இடமாக இந்தியா கருதப்படுகிறது. நம் மீது உலக நாடுகள் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவது, மத்தியில் உள்ள உறுதியான அரசு, இந்தியாவின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பது; இரண்டாவது, நவீன உள்கட்டமைப்பிற்கு இதுவரை இல்லாத வகையிலான அதிக முதலீடு; மூன்றாவது, நமது இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முதலீடு; இறுதியாக, எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும், எளிதான வாழ்க்கைக்கு வழிவகை செய்யவும் மத்திய அரசு உறுதிப்பூண்டிருப்பது.
சகோதர, சகோதரிகளே,
கடந்த 9 ஆண்டுகளில் இணைப்பு சார்ந்த உள்கட்டமைப்பிற்கு இதுவரை இல்லாத வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் உள்கட்டமைப்பிற்கு ரூ. 10 லட்சம் கோடிக்கும் மேலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலங்களை இணைப்பது, வந்தே பாரத் விரைவு ரயில்களின் சிறப்பம்சமாகும். அந்த வகையில் நவீன வசதிகள் பொருத்தப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விரைவான பயணத்தை மேற்கொள்ளும் இந்த ரயில், வடக்கு மற்றும் தெற்கு கேரளாவை இணைக்கும். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டம், தனித்துவம் வாய்ந்தது. கொச்சி நகரைச் சுற்றியுள்ள ஏராளமான தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு மலிவான மற்றும் நவீன போக்குவரத்து சேவையை இந்தத் திட்டம் வழங்கும்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் கேரள மக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் பல்வேறு தயாரிப்புகள் பற்றி நான் பேசியிருந்ததை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பப்பட உள்ளது. நூறாவது நிகழ்ச்சி, தேச கட்டமைப்பில் ஒவ்வொரு தனி நபரின் முயற்சி மற்றும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்விற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
(Release ID: 1919753)
Visitor Counter : 113
Read this release in:
Urdu
,
English
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam