சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா 2023 என்ற 6-வது ஆண்டு சுகாதார மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்
10 நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள், அதிகாரிகள், 70 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 வணிக பிரதிநிதிகள் இரண்டு நாள் நிகழ்வில் பங்கேற்கின்றனர்
प्रविष्टि तिथि:
25 APR 2023 3:00PM by PIB Chennai
அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா (AHCI) 2023 என்ற சுகாதார மாநாட்டின் 6வது ஆண்டு நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (26.04.2023) புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங், திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் 10 நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) உடன் இணைந்து இதை நடத்துகின்றன. ஒரே பூமி, ஒரே சுகாதாரம், அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா 2023, (One Earth One Health, Advantage Healthcare India 2023) என்ற தலைப்பில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துடன் இணைந்த முறையில் இந்த 6வது ஆண்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வு 2023 ஏப்ரல் 26 முதல் 27 வரை புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியானது, மீட்சித்திறன்மிக்க உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும். அத்துடன் மதிப்பு அடிப்படையிலான சுகாதாரப் பாதுகாப்பு மூலம் உலகளாவிய சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும மதிப்பு அடிப்படையிலான சுகாதார சேவைகளை வழங்கும் சுகாதார பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நாடு என்ற முறையில் மருத்துவ பயணத்துறையில் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தவும், இந்த நிகழ்ச்சி பயன்படும். உலகத் தரம் வாய்ந்த சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகளுக்கான முக்கிய மையமாக இந்தியா மாறிவருவதை வெளிப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளான 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கொள்கையுடன் இணைந்த வகையில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்- அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா 2023' என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இது பங்கேற்கும் நாடுகளுக்கு இடையே சுகாதார ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இந்தியாவில் இருந்து சேவைகளை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக, இந்த சர்வதேச உச்சிமாநாடு அறிவுப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும், உலகளாவிய மருத்துவ மதிப்பு பயணத் துறையில் முன்னணியில் உள்ள தொழில்துறையினர், வல்லுனர்கள், மருத்துவ அதிகாரிகள், நிபுணர்கள்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி சிறந்த அறிவு பரிமாற்ற மன்றமாக திகழும். இது உலகெங்கிலும் உள்ள இத்துறையினருக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், தொடர்புகளை உருவாக்கவும் வலுவான தளமாக அமையும்.
இந்த உச்சிமாநாட்டில் 125 கண்காட்சியாளர்கள் மற்றும் 70 நாடுகளில் இருந்து சுமார் 500 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு, நாடுகள், சார்க் நாடுகள் மற்றும் ஆசியான் நாடுகள் உள்ளிட்ட 70-நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள். வாங்குவோர்கள்- விற்பனையாளர்கள் சந்திப்புகள், திட்டமிடப்பட்ட நேரடி வணிக (B2B) சந்திப்புகள் போன்றவையும் இதில் நடைபெறும். இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்களை இந்த மன்றம் ஒருங்கிணைக்கும்.
இந்த உச்சிமாநாட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், தொழில்துறை அமைப்புகள், புத்தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதுடன் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
***
(Release ID: 1919459)
SM/PLM/RS/KRS
(रिलीज़ आईडी: 1919588)
आगंतुक पटल : 319