பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023-ம் ஆண்டின் இளைஞர்கள் 2047-ம் ஆண்டுக்கான இந்தியாவை வடிவமைப்பார்கள்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 19 APR 2023 1:28PM by PIB Chennai

2023-ம் ஆண்டின் இளைஞர்கள் 2047-ம் ஆண்டுக்கான இந்தியாவை வடிவமைப்பார்கள் என மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அமைதியை நிர்மாணித்தல் மற்றும் வேற்றுமையை அகற்றி சமரசத்தை உருவாக்குதல் குறித்த இளையோர் 20 நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். ஜி20 நாடுகள் அமைப்பக்கு இந்தியா தலைமை வகித்து இருப்பதால், 2023-ம் ஆண்டு இந்தியாவிற்கு மிக முக்கியமான ஆண்டாகத் திகழ்கிறது என்றார்.

2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த போது, நம்பிக்கையற்ற சூழலை நாடு எதிர்கொண்டு இருந்த நிலையில், ஏழைகளின் மேம்பாட்டுக்காகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும், அர்ப்பணிக்கும் அரசாக தமது அரசு இருக்கும் என மோடி குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி மோடி தலைமையிலான மத்திய அரசு பீடு நடை போடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் துறை சார்ந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக இணையதளம் வாயிலான வசதிகளை உட்புகுத்தியதுடன், மக்களை உள்ளடக்கிய எளிமையான நடைமுறைகளையும் மத்திய அரசு கையாண்டதை சுட்டிக்காட்டினார்.

10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு என்று  சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தப்படி,  ரோஸ்கார் மேளா எனப்படும்  மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய  அரசு வழங்கி வருவதையும் திரு ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2014-ம் ஆண்டு 400-ஆக இருந்த ஸ்டார்ட் –அப் இந்தியா நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 75 ஆயிரமாக அதிகரித்திருப்பதாகவும், இதன் மூலம் உலக அளவிலான ஸ்டார்ட் –அப்  சூழல் தரவரிசையில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி அதிக முன்னுரிமை அளித்து வருவதையும், வீடுகளில் மூங்கில் வளர்க்கும் திட்டத்திற்கு நூற்றாண்டு கால இந்திய வனச்சட்டத்திலிருந்து விலக்கு அளித்திருப்பதையும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை மூங்கில் துறையில் எளிமையான முறையில் தொழிலைத் தொடங்க இளம் தொழில் முனைவோர்களுக்கு  வாய்ப்பு வழங்கியிருப்பதையும், கடல் வளத்தைப் பாதுகாத்து இந்தியாவில் நீலப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் அமைச்சர்  தெரிவித்தார்.

1.jpg

கல்வித்துறையில் மாபெரும் முன்னேற்றத்தை மோடி அரசு உருவாக்கியிருப்பதை நினைவு கூர்ந்த அவர், 2014-ம் ஆண்டு 725 –ஆக இருந்த  பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 1000-த்தை  தாண்டியிருப்பதாகவும், கடந்த 9 ஆண்டுகளில்  வாரந்தோறும் ஒரு பல்கலைக்கழகம் வீதம் அமைக்கப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 260-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜி20 அமைப்பின் கீழ் 8 பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு இருப்பதையும், இதில் இளைஞர் 20 என்ற பணிக்குழு இடம்பெற்றிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். தற்போது 30 வயதுள்ள இளைஞர்கள் 2047-ம் ஆண்டு நாட்டின்  முதன்மை குடிமக்களாக திகழ்வார்கள் என்றும், அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

 

***

AP/ES/RSKRS


(Release ID: 1917914) Visitor Counter : 218