பாதுகாப்பு அமைச்சகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் நாட்டை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்: உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் அறிவுரை
Posted On:
15 APR 2023 1:26PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டை மேம்படுத்த புதிய யோசனைகளைக் கொண்டு வரவும், இந்தியாவை பாதுகாப்பான மற்றும் வலிமையானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் அரசுக்கு உதவுமாறும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2023 ஏப்ரல் 15-ம் தேதியன்று உதய்பூரில் ஜனார்தன் ராய் நகர் ராஜஸ்தான் வித்யாபீடத்தின் (பல்கலைக்கழகமாக கருதப்படும்) 16-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் உரையாற்றினார். வருங்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் 'புதிய இந்தியா' என்ற கனவை விரைவில் நனவாக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். ஆயுஷ்மான் பாரத், ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற பிரச்சாரங்கள் குறித்தும் பேசிய அவர், ஆரோக்கியமான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதையே இத்திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பிற்கு இளைஞர்கள் பங்களிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அவர் பட்டியலிட்டார். கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் அல்லது பாதுகாப்பு என அனைத்துத் துறைகளிலும், இந்தியா வலுவான நாடாக உருவெடுத்துள்ளதாகவும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, 2027-ம் ஆண்டுக்குள் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் மரபுகள், கலாச்சாரம் பற்றிய அறிவைப் பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறிய மத்திய அமைச்சர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற ஆளுமைகளிடமிருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் எனக் கூறினார்.
***
AD/CR/DL
(Release ID: 1916884)
Visitor Counter : 183