பிரதமர் அலுவலகம்

தேசிய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் உரையாற்றினார்


“அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன”

“இந்தியப் பொருளாதாரம் இன்று விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது”

“புதிய வாய்ப்புகளுக்கு கதவுகளைத் திறக்கும் வகையிலான கொள்கைகள் மற்றும் உத்திகளுடன் இன்றைய புதிய இந்தியா நகர்கிறது”

“2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா கடந்த காலத்தின் எதிர்வினை நிலைக்கு மாறாக ஒரு செயலாக்க அணுகுமுறையைக் கொண்டுள்ளது”

“21-ம் நூற்றாண்டின் 3-வது பத்து ஆண்டுகளில் கடந்த காலங்களில் யூகிக்க முடியாத அளவிற்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன”

“தற்சார்பு இந்தியா இயக்கத்தின் அணுகுமுறையும், சிந்தனையும் சுதேசியையும், உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவையும் கொண்டுள்ளது. தற்சார்பு இந்தியா இயக்கம் கிராமங்கள் முதல், நகரங்கள் வரை கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இயக்கமாகும்

“கிராமங்களில் சாலை வசதிகள் அமையும் போது ஒட்டுமொத்த சூழலிலும் படிப்படியான வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கிறது”

“அரசுப் பணியாளராக உள்ள நீங்கள், சாதாரண குடிமகனாக உணர்ந்த அனுபவங்கள

Posted On: 13 APR 2023 12:03PM by PIB Chennai

தேசிய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார்.  அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை அவர் வழங்கினார்.  

நாடு முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் பல்வேறு நிலைகளில் ரயில் மேலாளர், நிலைய மேலாளர், முதுநிலை வர்த்தக மற்றும்  பயணச்சீட்டுப் பரிசோதகர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர், சுருக்கெழுத்தர், இளநிலை கணக்காளர், தபால் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், வரி விதிப்பு உதவியாளர், திட்ட வடிவமைப்பாளர், இணைப் பொறியாளர் அல்லது  மேற்பார்வையாளர், உதவிப் பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், பயிற்சி அதிகாரிகள், தனி உதவியாளர், பலதரப்பட்ட பணி உள்ளிட்ட பணிகளில் சேர உள்ளனர். பல்வேறு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள புதிய பணியாளர்களுக்கு கர்மயோகி பரம் என்ற  இணையதள வழியிலான பாடப்பிரிவு மூலம் அவர்கள் தாங்களாகவே பயிற்சியில் ஈடுபட முடியும். பிரதமரின் உரையின் போது 45 இடங்களில் நடைபெற்ற  வேலைவாய்ப்பு முகாம்கள் இணைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அறுவடைத் திருநாள் (பைசாகி பண்டிகையை)யொட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார். பணி நியமனக் கடிதங்கள் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை அறிய திறன்மிக்க இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை அளிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆளும் மாநிலங்களான குஜராத் முதல் அசாம் வரையும், உத்தரப்பிரதேசம் முதல் மகாராஷ்டிரா வரையும் அரசுப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகப் பிரதமர் கூறினார்.  மத்தியப் பிரதேசத்தில் நேற்று மட்டும் 22,000 மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  நாட்டின் இளைஞர்களையொட்டிய நமது உறுதிப்பாட்டுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆதாரமாகத் திகழ்கிறது என்று கூறினார்.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், பொருளாதார மந்த நிலை மற்றும் தொற்று பாதிப்பு போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவை பிரகாசமான வளர்ச்சி கொண்ட நாடாக உலகம் பார்ப்பதாகத் தெரிவித்தார். தற்போதைய புதிய இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் வகையில் கொள்கைகள் மற்றும் யுக்திகளுடன் முன்னேறி வருவதாக அவர் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு செயல்திறன் மிக்க அணுகுமுறையை இந்தியா பின்பற்றுவதாகவும் இது முந்தைய காலத்தை விட திறன் வாய்ந்த மாற்றத்தை கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நல்ல மாற்றம் காரணமாக 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாம் ஆண்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகள் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். பத்தாண்டுகளுக்கு முன்பு இல்லாத துறைகளை தற்போது கண்டறிந்து வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். உதாரணத்துக்கு புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களை குறிப்பிட்ட அவர், இவற்றின் மூலம் 40 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். இவை இந்திய இளைஞர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ட்ரோன்கள் மற்றும் விளையாட்டுத் துறையின் வேலை வாய்ப்புகளுக்கான புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

சுதேசி எனப்படும் உள்ளூர் உற்பத்தி மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்து ஆதரவளிப்பது என்ற கொள்கைகளைத் தாண்டிய தன்மை கொண்டதாக தற்சார்பு இந்தியா இயக்கத்தின் அணுகுமுறைகளும், சிந்தனைகளும் உள்ளன என்று பிரதமர் கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய இயக்கம் என்று அவர் குறிப்பிட்டார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை கோள்கள் மற்றும் அதிவேக ரயில்களை உதாரணமாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் உள்நாட்டிலேயே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்ஹெச்பி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ரயில் பெட்டிகளுக்கான தொழில்நுட்பமும் மூலப் பொருட்களும் இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பொம்மைத் தொழில் துறையை உதாரணமாகக் கூறிய பிரதமர், இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளைக் கொண்டே இந்தியக் குழந்தைகள் பல ஆண்டு காலமாக விளையாடி வருவதாக அவர் கூறினார். அந்த பொம்மைகள் தரமானதாக இல்லை எனவும், அவற்றின் வடிவமைப்பும்  இந்தியக் குழந்தைகளை மனதில் வைத்து உருவாக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதைக் கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கான தர நிர்ணய அளவீடுகளை அரசு வகுத்துள்ளதுடன் உள்நாட்டிலேயே பொம்மை உற்பத்தித் தொழிலை அரசு ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக நாட்டின் பொம்மைத் தொழில்துறை முற்றிலும் மாற்றமடைந்துள்ளதாகவும், இத்துறை ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு உபகரணங்களில் இந்தியா இறக்குமதி செய்தே ஆக  வேண்டும் என்று பல ஆண்டுகளாக பரவலான மனநிலை இருந்து வந்தது என்றும் அவர் கூறினார். இதை மாற்றும் வகையில் பாதுகாப்புத்துறையில் அணுகுமுறையை மாற்றி உள்நாட்டு உற்பத்தியை அரசு ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக இந்திய ஆயுதப்படைகளுக்குத் தேவையான 300க்கும் மேற்பட்ட தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவற்றை உள்நாட்டில் மட்டுமே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். அத்துடன் ரூ.15,000 கோடி மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் உலகில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் செல்பேசி உற்பத்தித் துறையில்  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றியும் திரு மோடி குறிப்பிட்டார். உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கமளித்தல், அதற்கு மானியம் வழங்குதல், காரணமாக இந்தியா பெருமளவு அந்நியச் செலாவணியை சேமித்துள்ளது. உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பதோடு செல்பேசிகளை இந்தியா தற்போது ஏற்றுமதி செய்கிறது என்றும், அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக அடிப்படைக் கட்டமைப்பில் முதலீட்டின் பங்களிப்பைப் பிரதமர் எடுத்துரைத்தார். மூலதனச் செலவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், கட்டிடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அடிப்படைக் கட்டமைப்பால் வேலைவாய்ப்பு அதிகரிப்பதை எடுத்துக்காட்டிய பிரதமர், தற்போதைய அரசின் பதவிக் காலத்தில் மூலதனச் செலவு நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறினார்.

2014-ம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் பிந்தையை வளர்ச்சிப் பணிகளின் உதாரணத்தை எடுத்துரைத்த பிரதமர், 2014-க்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் வெறும் 20,000 கிலோமீட்டர் ரயில்பாதை மட்டுமே மின்மயமாக்கப்பட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 40,000 கிலோ மீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார். 2014-ம் ஆண்டிற்கு முன் மாதந்தோறும் 600 மீட்டராக இருந்த மெட்ரோ ரயில் தடங்கள் அமைப்பது தற்போது 6 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்றார். 2014-ம் ஆண்டுக்கு முன் 70க்கும் குறைவான மாவட்டங்களில் மட்டுமே இருந்த எரிவாயு வலைப்பின்னல் எண்ணிக்கை தற்போது 630 மாவட்டங்களாக  அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். ஊரகப்பகுதிகளில் சாலைகளின்  நீளம் பற்றி பேசிய பிரதமர்,  2014-ம் ஆண்டுக்கு முன் 4 லட்சம் கிலோ மீட்டர் என்பதிலிருந்து தற்போது 7 லட்சம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்றார். கிராமங்களுக்கு சாலைகள் செல்வதால், ஒட்டுமொத்த பகுதியிலும் விரைவான வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

விமானப் போக்குவரத்துத் துறை பற்றி பேசிய  திரு மோடி, 2014-ல் 74-ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 148-ஆக அதிகரித்துள்ளன என்றார். துறைமுகப்பிரிவிலும் இதேபோன்ற வளர்ச்சி காணப்படுகிறது. சரக்குகளைக் கையாள்வதில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இருமடங்கு அதிகரித்திருப்பதால், பெருமளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை பற்றி பேசிய பிரதமர், 2014-ம் ஆண்டுக்கு முன் நாட்டில் 400க்கும் குறைவாகவே மருத்துவக்கல்லூரிகள் இருந்தன என்றும், தற்போது 660 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன என்றும் கூறினார். 2014-ல் இளநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்கள் 50 ஆயிரம் என்பதிலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்தது என்று கூறிய பிரதமர், இதனால் பட்டம் பெறும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் இருமடங்காகியுள்ளன என்றார்.

ஊரகப் பகுதிகளில், வேளாண் துறையில் 2014ம் ஆண்டிற்குப் பிறகு விவசாயிகள் உற்பத்திப் பொருட்களின் ஒருங்கிணைப்புத் திட்டங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளில் உதவிகளும், மேம்படுத்தப்பட்ட சேமிப்பு வசதிகள், 3 லட்சம் பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் 6 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு கண்ணாடி இழைப் பதிக்கப்பட்டுள்ளது என்றும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் இதுவரை 2.5 கோடி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். இது தவிர 10 கோடி கழிப்பறைகள் மற்றும் 1.5 லட்சம் நல்வாழ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

வளர்ந்து வரும் தொழில்முனைவுத்திறன் மற்றும் சிறுதொழில்
நிறுவனங்களை அரவணைத்துச் செல்லும் போக்குப் பற்றியும் பிரதமர் திரு.மோடி பேசினார். பிரதமரின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகளில் சுமார் ரூ.23 லட்சம் கோடி மதிப்பிலான   உத்தரவாதம் இல்லாத கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 70% பேர் பெண் பயனாளிகள் ஆவார். இந்தத் திட்டம் 8 கோடி  புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று முதல்முறையாக சிறு வியாபாரங்களைத் தொடங்கியிருப்பவர்கள் என்றும் பிரதமர் கூறினார். அடிப்படை ஆரம்ப நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நுண் பொருளாதாரத்தின் ஆற்றலை பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

இன்று பணி நியமன ஆணைகளை பெற்றிருப்பவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்கு தங்களது பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பாக கருதி, வரும் 2047 ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணம் செய்யுங்கள் என்றார். இன்று, அரசு ஊழியராக உங்களது பயணத்தைத் தொடங்குகள் என்றும் இந்தப் பயணத்தின் போது உங்களை சாதாரணக் குடிமகனாக உணர்த்திய தருணங்களை நினைவில் கொள்ளுங்கள் என்றும் கூறினார். அரசிடமிருந்து புதிதாக பணியில் இணைபவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசிய பிரதமர், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதுதான் உங்களது பொறுப்பாகும். உங்கள் ஒவ்வொருவரின் பணியும் பொதுமக்களின் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உங்களது பணிகளின் மூலம் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களின் வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கான வழிகளில் செயல்படுங்கள் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். இறுதியாக, புதிதாகப் பணியில் சேர்பவர்கள் தங்களது கற்கும் முயற்சிகளை ஒருபோதும் நிறுத்திட வேண்டாம் என்றும், புதிதாக அறிந்து கொள்ளும் அனைத்து விஷயங்களும் உங்களது பணிகளிலும், ஆளுமைத் திறனிலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆன்லைனில் கற்கும் வலைதளமான கர்மயோகி மூலம் உங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

பின்னணி:

பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் என்பது வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பாக பிரதமரின் அதிகபட்ச முன்னுரிமையை வெளிகாட்டும் விதமாக நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் புதிய வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு அதிகாரமளித்து தேசிய மேம்பாட்டில் தங்களது பங்களிப்பை வழங்குவதற்கான திட்டமாகும்.

***

AP/SMB/IR/PLM/GS/AG/RS/SG/MA

 



(Release ID: 1916209) Visitor Counter : 161