வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரான்ஸ் உடனான 25 ஆண்டுகால உத்திசார் கூட்டு செயல்பாட்டை இந்தியா ஆழமாக மதிக்கிறது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
11 APR 2023 1:10PM by PIB Chennai
உலகம் அனைத்து கோணங்களிலும் இந்தியாவை உற்றுநோக்கி வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். பாரிசில் இந்திய சமுதாயத்தினரிடம் கலந்துரையாடிய அவர், பிரான்ஸ் உடன் 75 ஆண்டுகால நட்பையும் 25 ஆண்டுகால உத்திசார் கூட்டு செயல்பாட்டையும் இந்தியா கொண்டுள்ளதாகவும் கூறினார்.
பாதுகாப்பு, பொருளாதாரம் முதலீடுகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் விரும்பத்தக்க நட்பு நாடாக பிரான்ஸ் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகாலத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தில் இது எதிரொலித்துள்ளது என்று அவர் கூறினார். பிரான்ஸ்-ல் உள்ள இந்திய சமுதாயத்தினர் இரு நாடுகளுக்குமிடையே பாலமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பம், முதலீடுகள், சுற்றுலா போன்றவற்றில் பிரான்ஸ் உடனான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமுதாயத்தினர் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக கடந்த 9 ஆண்டுகளில், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் மத்திய அரசு செயல்படுவதாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டு வரை நாட்டில் பாதி பேருக்கு கழிப்பறை வசதி இல்லை என்று கூறிய அவர், மக்களின், குறிப்பாக பெண்களின் கன்னியத்தை காக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் அனைவருக்கும் கழிப்பறை வசதி கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் 50 கோடி பேருக்கு பயனளிப்பதாக அவர் கூறினார். மத்திய அரசின் சீர்திருத்தங்கள் இந்தியாவை வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். கொவிட் பாதிப்புக் காலத்திலும் நாட்டு மக்களின் உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார். கொவிட் பாதிப்புக் காலத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டியதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஏற்றுமதி 2022-23-ம் நிதியாண்டில் 765 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சியடைந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இது புதிய இந்தியாவிற்கான உதாரணம் என்றும் திறன்கள் மற்றும் நம்பிக்கையுடன் இந்தியா வளர்ந்து வருவதை இது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டிக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட வேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று கூறிய திரு பியூஷ் கோயல், அதை அடைவதில் பிரான்ஸ்-ல் உள்ள இந்திய சமுதாயத்தினரும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
***
AD/PLM/RJ/KPG
(Release ID: 1915611)
Visitor Counter : 172