ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்பட்டது

Posted On: 10 APR 2023 1:51PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் இன்று புதுதில்லியில் ஒருநாள் அறிவியல் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஹோமியோபதி நாள் கொண்டாடப்பட்டது. இந்த மாநாட்டுக்கான கருப்பொருள் “ஹோமியோ குடும்பம்- அனைவருக்கும் ஆரோக்கியம், ஒரு ஆரோக்கியம், ஒரே குடும்பம்” என்பதாகும். ஹோமியோபதி மருத்துவ முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இது கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், ஆரோக்கியத்திற்கு விரிவான ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த சுகாதாரத்திற்கு புதிய முன் முயற்சி என்னும் தொடக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். ஹோமியோபதி இயற்கையுடன் தொடர்புடைய மருத்துவ முறை என்று குறிப்பிட்ட அவர்,  இரண்டாவது பெரிய அதிவேக வளர்ச்சியைக் கொண்ட மருத்துவ முறையாகவும் திகழ்கிறது என்று கூறினார்.

பெருந்தொற்றை சமாளிப்பதில் ஹோமியோபதியின் பங்கு சிறப்பானது என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், அதன் மகத்துவத்தை பாராட்டினார். இந்தியா உலகின் மருந்தகமாக திகழ்கிறது என்று கூறிய அவர், இந்திய மருத்துவத்தின் தர உறுதிப்பாடே இதற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஆயுஷ் மருத்துவ முறையை ஊக்குவிக்க அமைச்சகம் மேற்கொண்டுள்ள முன் முயற்சிகள் குறித்து விளக்கினார். அதிக ஆதார அடிப்படையிலான மருத்துவ முறையை மேம்படுத்துவதும், செயல்திறன் மிக்க ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் அமைச்சகத்தின் முன்முயற்சிகளாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.  ஹோமியோபதி மருத்துவதில் தரமான ஆராய்ச்சிக்கு ஆதரவு வழங்க ஆயுஷ் அமைச்சகம் பட்ஜெட்டை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் துறையின் இணையமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய், ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

AD/PKV/AG/KPG


(Release ID: 1915377) Visitor Counter : 193