ஆயுஷ்
azadi ka amrit mahotsav

திப்ருகரில் நடைபெற்ற யோகா திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Posted On: 07 APR 2023 12:19PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட 75 நாட்கள் யோகா திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று திப்ருகர் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் மற்றும் ஆயுஷ்துறை அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால், திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, அருணாச்சலப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் சௌனா மெயின் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால், “திப்ருகரின் அழகிய சூழலில் இந்த அற்புதமான ‘யோகா திருவிழாவை’ நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியையும். பெருமையையும் தருகிறது. உலக சுகாதார தினத்தன்று கொண்டாடப்படும் இந்த யோகா திருவிழா நிகழ்வில்,  திப்ருகரில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் விரைவில் 100 படுக்கைகள் அமைக்க உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது திப்ருகரை இந்தப் பகுதியின் சுகாதார மையமாக மேலும் மேம்படுத்தும். இந்த மையம் அசாம் மக்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் பிராந்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும்” என்றார்.

மேலும், மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் யோகா (MDNIY) மற்றும் திப்ருகர் பல்கலைக்கழகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்விழாவில் திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, “இந்தியப் பாரம்பரியத்தின் மிகப்பெரிய வரங்களில் ஒன்றான யோகாவைச் செய்ய நாம் அனைவரும் இன்று இந்த அழகான காலையில் இணைந்திருப்பது ஒரு சிறந்த தருணம்” என்றார். அருணாச்சலப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் சவுனா மெய்ன் பேசுகையில், “இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தின் அற்புதமான பரிசு யோகா. இன்று நான் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர்களோடு, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும், தான்சானியா, உகாண்டா, கென்யா, டோகோ, நேபாளம், நைஜீரியா, லெசோதோ, போட்ஸ்வானா, எகிப்து, நமீபியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், யோகா ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

 

----

(Release ID :1914543)

VJ/CR/KPG


(Release ID: 1914657) Visitor Counter : 125