ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் இயக்கத்தில் 60% இலக்குகள் நிறைவு

Posted On: 04 APR 2023 3:32PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையில், இன்று 60% கிராமப்புற வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. இந்தியாவில் இதுவரை 1.55 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் (மொத்த கிராமங்களின் எண்ணிக்கையில் 25%) 'ஹர் கர் ஜல்' என்று பதிவாகியுள்ளன. அதாவது, இந்தக் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தங்கள் வீட்டிலேயே குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 86,894 புதிய குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜல் ஜீவன் இயக்கம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய நலத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டம் தொடங்கப்பட்ட நேரத்தில், நாட்டிலுள்ள 19.43 கோடி கிராமப்புற குடும்பங்களில், 3.23 கோடி (16.65%) குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி இருந்தது. 2023 ஏப்ரல் 4-ம் தேதியன்று 'ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர்' என்ற பயணத்தில் நாடு மற்றொரு மைல்கல்லைக் கடந்துள்ளது. நாட்டில் 11.66 கோடிக்கும் அதிகமான (60%) கிராமப்புற குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. குஜராத், தெலுங்கானா, கோவா, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள், டாமன்-டையூ & தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்கள் 100% இணைப்பைப் பெற்றுள்ளன.

குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, அனைத்து கிராமப்புற பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு சமைப்பதற்கும், கைகளைக் கழுவுவதற்கும், கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கும் குழாய் நீர் இணைப்பு வழங்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, 9.03 லட்சம் (88.26%) பள்ளிகளிலும், 9.36 லட்சம் (83.71%) அங்கன்வாடி மையங்களிலும் குழாய் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

"பாதுகாப்பான நீர் வழங்கல்" என்பது ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கிய கருத்தாகும். இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, நாட்டில் 14,020 ஆர்சனிக் மற்றும் 7,996 புளோரைடு பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் இருந்தன. 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை முறையே 612 மற்றும் 431 ஆகக் குறைந்துள்ளது. பெண்கள் மற்றும் கிராமப்புற சமூகங்கள் இணைந்து செயல்படுவதால், ஜல் ஜீவன் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

நோபல் பரிசு பெற்ற டாக்டர் மைக்கேல் க்ரீமர் குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைத்தால், கிட்டத்தட்ட 30% குழந்தை இறப்புகளை குறைக்க முடியும் என்று எடுத்துரைத்துள்ளார். ஜல் ஜீவன் இயக்கம் கிராமப்புறங்களில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஐஐஎம் பெங்களூரு நடத்திய முதற்கட்ட ஆய்வில், குழாய் நீர் விநியோகத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10.92 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறவும் இந்த இயக்கம் வழிவகுத்துள்ளது.

                                                                                                                                                                            ------

AP/CR/KPG



(Release ID: 1913629) Visitor Counter : 170