நிதி அமைச்சகம்
அரிய வகை நோய்களின் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழுவதும் விலக்கு
Posted On:
30 MAR 2023 10:20AM by PIB Chennai
அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021இல் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரிய வகை நோய்களின் சிகிச்சைக்காக தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து மத்திய அரசு முழு விலக்கு அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சலுகையைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி அல்லது மத்திய/ மாநில சுகாதார சேவை இயக்குநரிடமிருந்து சான்றிதழ் ஒன்றை பொருட்களை இறக்குமதி செய்யும் நபர் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, மருந்துகளுக்கு 10% சுங்க வரியும், உயிர்காக்கும் மருந்துகள்/ தடுப்பூசிகளின் ஒரு சில பிரிவுகளுக்கு சலுகையாக 5% அல்லது வரி விலக்கும் அளிக்கப்படும்.
முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான சிறப்பு மருந்துகளுக்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரிய வகை நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கும் சுங்க வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இதுபோன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளின் விலை அதிகம் என்பதால் அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. 10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு இது போன்ற அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வருடந்தோறும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை தேவைப்படும்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விலக்கால் கணிசமான தொகை சேமிக்கப்படுவதோடு, நோயாளிகளுக்கு பெரும் நிவாரணமும் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1912095
***
(Release ID: 1912095)
AD/RB/RR
(Release ID: 1912142)