பாதுகாப்பு அமைச்சகம்

பிராந்திய பாதுகாப்பு, நிலைத்தன்மை, பாதுகாப்பு திறன்களை அதிகரித்தல் ஆகியவற்றில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து இணைந்து செயல்படும் : பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 28 MAR 2023 1:53PM by PIB Chennai

பிராந்தியத்தின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, பாதுகாப்பு திறன்களை அதிகரித்தல் ஆகியவற்றில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். புனேவில் நடைபெற்ற முதலாவது இந்தியா - ஆப்பிரிக்க ராணுவ தளபதிகள் மாநாட்டில் இன்று (2023 மார்ச் 28 ) கலந்து கொண்டு பேசிய திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களிலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று கூறினார். ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு படைகளின் திறன்களை மேம்படுத்தவும், அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு உதவவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

     தேசத்தின் முன்னேற்றம் என்பது பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும்  போது தான் சாத்தியமாகும் என்று அவர் கூறினார். இந்தியாவுக்கும் - ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவ பயிற்சிகள், தீவிரவாத தடுப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முக்கியமான அம்சங்களாக கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு படை பிரதிநிதிகள் அவ்வப்போது இந்தியா வந்து பயிற்சிகளை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

     அண்மைக் காலங்களில் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதியில் இந்தியா முன்னேறி வருவதாக அவர் கூறினார். ஆப்பிரிக்க நாடுகள் தங்களது ராணுவ தளவாட மற்றும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்தியாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

  ஆப்பிரிக்க நாடுகளின் ராணுவ தளவாட தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என்று அவர் கூறினார். வறுமை ஒழிப்பு, நீடித்த வளர்ச்சியை எட்டுதல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவும் ஆப்பிரிக்க நாடுகளும் ஒரே இலக்கை கொண்டுள்ளதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

     இந்த இந்திய ஆப்பிரிக்க ராணுவ தளபதிகள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் 31 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

AD/PLM/MA/KRS

***



(Release ID: 1911449) Visitor Counter : 143